கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில், பலரது கடும் உழைப்பிலும் உருவாக்கப்படும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் தினத்திலேயே அந்தத் திரைப்படங்களின் திருட்டு வீசிடிக்கள் தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் எளிதாகக் கிடைத்து விடுகின்றன இப்போதெல்லாம்.
தமிழகத்தில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடியெடுத்து வைத்த தமிழ் செயற்க்கைக்கோள் தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் நிலைகுலைந்து போய்த் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தமிழ்த் திரைத்துறை.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பெரிய நகரங்களில் திரையிடப்படும் எல்லாப் புதிய தமிழ்த் திரைப்படங்களும் குறைந்த பட்சம் ஐம்பதிலிருந்து நூறு நாட்களுக்குக் குறையாமல் தொடர்ந்து ஒரே திரையங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றிநடை போட்டுக் கொண்டு இருந்தன.
அப்போது வெள்ளிவிழாக் கண்ட திரைப்படங்கள் எல்லாம் இருநூறு நாட்களையும் தாண்டி ஒரே திரையரங்கில் தொடர்ந்து பெரும்பாலும் அரங்கு நிறைந்த காட்சிகளுடன் வெற்றி நடை போட்டுப் பல சாதனைகளை நிகழ்த்தின. கரகாட்டக்காரன் திரைப்படம் ஒரு வருடத்திற்கும் மேலே மதுரையில் உள்ள ஒரு திரையரங்கில் தொடர்ந்து வெற்றி நடை போட்டது.
ஆனால் அவையெல்லாம் இப்போது பழங்கதை ஆகி விட்டது. இன்று தமிழ் மக்களின் தொலைகாட்சி மோகத்தினால் இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளைக் கண்டு விட்டாலே, அது ஒரு வெற்றிப் படம் என்று சொல்லும் அவல நிலையில் தவிக்கிறது தமிழ் திரைத்துறை.
இது போதாதென்று கடந்த பத்தாண்டுகளில் புதிதாகத் தோன்றியுள்ள இன்னொரு பெரும் பிரச்சினை திருட்டு வீசிடி. திரைப்படம் வெளியாகும் அன்றோ அல்லது சில நேரங்களில் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே கூட அந்தத் திரைப்படங்களின் திருட்டு வீசிடிக்கள் மிக எளிதாக வெளி வந்து விடுகின்றன.
இயக்குனரின் பல்லாண்டு காலக் கனவையும், எண்ணற்ற தொழிலாளர்களின் ஈடு இணையற்ற கடும் உழைப்பையும், பல கோடி ரூபாய் மூலதனத்தையும் பயன்படுத்தி உருவாக்கப் படுகின்ற ஒவ்வொரு திரைப்படமுமே பலரது வாழ்க்கையைத் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.
திரைப்படத்தின் இயக்குனராகட்டும், திரைப்படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களாகட்டும், திரைப்படத்தின் தாயாரிப்பாளராகட்டும், திரைப்படத்தில் நடிக்கின்ற ஒவ்வொரு நடிகர் நடிகைகளாகட்டும், இவர்கள் எல்லோரது எதிர்கால வாழ்க்கையுமே அந்தத் திரைப்படத்தின் வெற்றி தோல்வியைப் பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது.
ஆனால் எப்போதுமே குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயலும் குறுக்குப் புத்தி உடையவர்கள், இதைபற்றி எல்லாம் கவலைப் படாமல் புத்தம்புதிய திரைப்படங்களை எல்லாம் திருட்டுத் தனமாகப் பதிவு செய்து விசிடிக்களாக விற்பனை செய்கின்றனர்.
திரைப்படங்களின் திருட்டு விசிடிக்கள் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ குண்டர் சட்டத்தில் கைது செய்து மிகக் கடுமையான தண்டனைகள் தரக் கூடிய வகையில் அரசு சட்டங்களை இயற்றி உள்ளது.இருந்தாலும் இக்தகைய செயல்கள் குறையவில்லை.
அரசு என்னதான் சட்டங்களை இயற்றித் தண்டனைகளைக் கடுமையாக்கினாலும் அந்த சட்டங்களை முறையாக அமல்படுத்தி சட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடைந்து நன்மைகள் விளைவிக்கச் செய்வதும் அல்லது அந்தச் சட்டங்கள் வீணாகப் போகும் படி செய்வதும், அந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தும் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கையில்தானே உள்ளது.
ஆனால் அரசாங்கம் என்னதான் கை நிறைய சம்பளத்தையும் சலுகைகளையும் அள்ளிக் கொடுத்தாலும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் துரோகம் செய்து சமூக விரோதிகளுக்குத் துணை சென்று அதன் மூலமாகக் குறுக்கு வழியில் பெரும் பணம் ஈட்டுவதே பல அதிகாரிகளின் நோக்கமாக இருக்கிறது.
பெரும் பணம் புழங்கும் திருட்டு விசிடி வியாபாரத்தை கண்டும் காணாமல் இருக்கக் காவலர்கள் பெரும் பணத்தைக் கையூட்டாகப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்களின் நேரடியான ஆதரவு இருப்பதால் இப்போதல்லாம் பல இடங்களிலும் புத்தம் புதிய திரைப்படங்களின் திருட்டு வீசிடிக்கள் சரளமாகப் புழங்குகின்றன.
கோவையில் திருட்டு வீடியோத் தடுப்புக் காவலர்கள் லஞ்சம் வாங்குவதற்கென்றே தனியாக ஒரு அலுவலகத்தையே நடத்தி வந்து உள்ளனர் என்றால் அவர்களுக்குக் கிடைக்கும் லஞ்சப் பணம் எவ்வளவு அதிகம் என்று அறிந்து கொள்ள முடிகிறது அல்லவா?
கோவை பாரதி நகரில் ஒரு வீட்டிற்கு மாதம் பத்தாயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, அந்த வீட்டைத் தங்கள் லஞ்ச வசூல் பணிகளுக்கேன்றே பிரத்தியேகமாகப் பயன்படுத்தி வந்து உள்ளனர் கோவை மாநகர திருட்டு வீடியோ ஒழிப்புக் காவலர்கள்.
லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும், மற்ற உயர் அதிகாரிகளால் பிரச்சினைகள் எதுவும் வந்து விடக் கூட்டாது என்பதற்காகவும் இது போலத் தனியாக ஒரு லஞ்ச அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர்.
இந்தியாவிலேயே லஞ்சம் வாங்குவதற்காகவும், லஞ்சப் பணத்தின் கணக்குகளைப் பார்ப்பதற்காகவும் தனியாக ஒரு அலுவலகத்தைத் திறந்து நடத்தியவர்கள் என்ற பெருமை இந்தக் கோவை மாநகர திருட்டு வீடியோத் தடுப்புக் காவலர்களைத்தான் சேரும்.
குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசாங்கத்தால் சட்டங்கள் எவ்வளவு தான் கடுமையாக இயற்றப்பட்டாலும், இது போலக் குற்றவாளிகளுடன் கைகோர்த்துக் கொண்டு சமூக விரோதச் செயல்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் இருக்கும் வரை நாட்டில் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்கவே முடியாது என்பதுதான் உண்மை.................
No comments:
Post a Comment