தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும் அண்மைய சில ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கானா பகுதியை சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் தெலுங்கானா விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் தெலுங்கானாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதற்காக உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குவிந்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தடையைமீறி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர்.
மாணவர்கள் உண்ணாவிரதம் காரணமாக ஹைதராபாத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடும் என்பதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா மாணவர்கள் அதிக அளவில் படிக்கும் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களைச் சுற்றிலும் ஏராளமான அதிரடிப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. கலவரத்தை தடுக்க தண்ணீர் பீரங்கி, கண்ணீர் புகை குண்டு வாகனங்கள் போன்றவை ஆங்காங்கே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குதிரைப்படை வீரர்களும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
உஸ்மானியா பல்கலைக்கழகம் அருகே உள்ள சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. உஸ்மானியா பல்கலைக் கழகத்தை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆங்காங்கே சோதனை சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர் சங்கத் தலைவர்கள் 27 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல் மேடக், கம்மம் உள்ளிட்ட மற்ற மாவட்டங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment