அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Saturday, July 16, 2011

தமிழக அரசின் கடும் வரிவிதிப்பால் திடீர் பாதிப்பு : வாட்டுது வாட் படுத்தது பிசினஸ்!

சென்னை:  தமிழக அரசு வாட் வரியை உயர்த்தியதன் எதிரொலியாக செல்போன், டி.வி. மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை குறைந்து மந்தநிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தமிழக அரசு கடந்த 12ம்தேதி முதல் அதிரடியாக வாட் வரியை உயர்த்துவதாக அறிவித்தது. அதன்படி இதுவரை 4 சதவீத வாட் வரியாக இருந்த மருந்து, செங்கல், இரும்பு, வீட்டு உபயோக பொருட்கள், பாத்திரங்கள், அலுமினியம், மூங்கில், ஹெல்மெட் ஆகிய பொருட்களின் மீதான வரி 5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதேபோன்று 12.5 சதவீதமாக இருந்த உணவு பொருட்கள், வாஷிங் மெஷின், ஏ.சி., மின்விசிறி, ஐஸ்கிரீம், மர சாமான்கள், கிரானைட், மார்பிள், சிமென்ட், பசை பொருட்கள், சாக்லெட், அழக சாதன பொருட்கள், எலக்ட்ரிக் பொருள்கள், ஜெராக்ஸ் எந்திரம் ஆகியவை மீது வாட் வரி 14.5 சதவீதமாகவும், செல்போன், எல்சிடி டி.வி., ஐபோன், கம்ப்யூட்டர், புகையிலை பொருட்கள் மீதான வாட் வரி 4 சதவீதத்தில் இருந்து பல மடங்கு உயர்ந்து 14.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் தமிழக அரசுக்கு ரூ.4000 கோடி வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அரசுக்கு வேண்டுமானால் பலகோடி வருமானம் கிடைக்கலாம். ஆனால் இந்த சுமை முழுவதும் மக்கள் தலையில்தான் விழும் என்கிறார்கள் வீட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்கள். அரசு அறிவித்தபடி கடந்த 12ம் தேதி முதல் அனைத்து பொருட்கள் மீதான வரியும் உயர்த்தப்பட்டு விட்டது. அதிகப்பட்சமாக செல்போன், கம்ப்யூட்டர், எல்சிடி டி.வி. மீதான வாட் வரி 10.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரணமாக ரூ.5 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட செல்போன் தற்போது ரூ.5,550க்கு விற்கும் நிலைக்கு கடைக்காரர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக செல்போன் விலையும், எல்சிடி டி.வி. விலையும் மந்தமாக உள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.

மொபைல் விற்பனை சரிவு இதுகுறித்து அண்ணாசாலையைச் சேர்ந்த பிரபல செல்போன் மொத்த விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறும்போது, “இந்தியாவிலேயே அதிகளவில் செல்போன் விற்பனை செய்யும் மாநிலம் தமிழகம்தான். தமிழகத்தில் மட்டும் 5 கோடி செல்போன்கள் உள்ளது. மொத்த மக்கள் தொகையை காட்டிலும் (மக்கள் தொகை 7.25 கோடி) இது கொஞ்சம் குறைவுதான். பலர் செல்போன் விரும்பி வாங்குகிறார்கள் என்பதால் அரசு குறி வைத்து செல்போன் மீது இருந்த 4 சதவீத வாட் வரியை 14.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இதனால் செல்போன் விலை ஸி 200 முதல் ஸி 1,500 வரை அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக செல்போன் விற்பனை குறைந்துள்ளது“ என்றார்.

அதேபோன்று எல்சிடி டி.வி. மீதான விற்பனை வரியும் 10.5 சதவீதம் கூட்டியுள்ளதால் ஒரு டி.வி.யின் விலை ஸி 3 ஆயிரத்துக்கும் அதிகமாக விலை கூடியுள்ளது. இதனால் டி.வி. விற்பனையும் மந்தமாக உள்ளதாக வும், பிரிட்ஜ், வாஷின் மெஷின், ஏ.சி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் திடீர் விலை உயர்வால் வியாபாரிகள் பலகோடி பொருட்களை கொள்முதல் செய்து விட்டு, விற்க முடியாமல் திணறி வருகிறார்கள். எண்ணெய் வாங்குவோர் சரிவு தமிழகத்தில் சமையல் எண்ணெய் விற்பனையை பொறுத்தவரையில், ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வரி விலக்கு இருந்தது. இதில் ஏராளமான வரி ஏய்ப்பு என்று சொல்லி, ஸி 500 கோடி வரையிலான விற்பனை வரம்பை ரூ.5 கோடியாக குறைத்து அரசு அறிவித்தது. இதன் மூலம் ஆண்டிற்கு ஸி 5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்பவர்கள் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதனால் விலை ரூ.5 வரை உயர்ந்துள்ளது. அதாவது, பாமாயில் எடைபோட்டு விற்பனை செய்வது ஒரு கிலோ ஸி 56லிருந்து ரூ.62க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.120லிருந்து 
ஸி 125க்கும், 2ம் ரகம் ஸி 100லிருந்து 105க்கும், அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.130லிருந்து ரூ.135க்கும், 2ம் ரகம் ரூ.85லிருந்து ரூ.90க்கும், கடலை எண்ணெய் ரூ.90லிருந்து ரூ.95க்கும் உயர்ந்தது. பாக்கெட்டில் விற்கப்படும் எண்ணெய்கள் ரூ.2 முதல் 3 வரை அதிகரித்தது. இதனால், நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் எண்ணெய் கொண்டு சமையல் செய்வதை கணிசமாக குறைக்க தொடங்கியுள்ளனர். பொருட்களை சுட்டு சாப்பிட்டு ஆதிக்காலத்திற்கே திரும்ப செல்ல வேண்டியது உள்ளதே என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர். 

இது குறித்து தமிழ்நாடு மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் சொரூபன் கூறியதாவது: எண்ணெய் விலை உயர்வினால் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. 1,000 வியாபாரிகள் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தனர். தற்போது, ரூ.5 கோடிக்கு மேல் எண்ணெய் விற்பனை செய்வோர் வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதனால், எண்ணெய் வியாபாரிகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. எண்ணெய் வருமானத்தை கொண்டே அரசு தற்போது அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் செய்து முடித்து விடலாம். ‘திடீரென்று‘ விலை அதிகரித்ததால் கணக்கு வழக்குகளை சரிசெய்வது குழப்பமாக உள்ளது.

பத்த வைக்காமலே சுடும்

மொத்த வியாபாரி கமால் பாட்ஷா கூறுகையில்,‘‘கூடுதல் வருமானத்துக்காக தமிழக அரசு வரிகளை ஒரே நாளில் அமல்படுத்த உத்தரவிட்டது. இதனால் புகையிலை பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதை திடீரென நிறுத்தியது. இதனால் தமிழகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், அந்நிறுவனங்கள் அரசு விதித்த வரிகளை தாங்களே செலுத்த முடிவு செய்துள்ளது. பில்களில் வரிகளை காட்டாமல் ஒரே பில்லாக மொத்த வியாபாரிகளுக்கு வழங்கி வருகிறது. தமிழகத்தில் உயர்த்தப்பட்ட வரியால் அந்நிறுவனங்கள் நாடு முழுவதும் பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விலையை ஒட்டு மொத்தமாக உயர்த்த வாய்ப்புள்ளது‘‘ என்றார்.

பேன்ட், சட்டை, சேலைக்கு பட்ஜெட்டில் ‘துண்டு’ விழும் 

ஜவுளி துறையில் வரியை 5 சதவீதம் தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதனால், நூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக துணிகளின் விலையையும் 5 சதவீதம் கடைக்காரர்கள் உயர்த்திவிட்டனர். பேன்ட், சர்ட், சேலை, வேட்டி போன்ற துணிகளின் விலையும் உயர்ந்துள்ளது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பேன்ட், சட்டை, வேட்டி, சேலை, சுரிதார் என்று வாங்கும் போது மாத பட்ஜெட்டில் துண்டு விழும் என்பது உறுதி. இது குறித்து துணிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது: தமிழக அரசு விதித்துள்ள வாட் வரி தேவையில்லாத ஒன்று. இதனால், பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான். தற்போது எங்கள் கடையில் துணியின் விலையை 5 சதவீதம் உயர்த்தி உள்ளோம். உதாரணத்திற்கு ஒரு சட்டையின் விலை ரூ.100 என்றால், அதை ஸி105க்கு விற்பனை செய்து வருகிறோம். படிக்காத பாமர மக்களுக்கு இந்த விலை உயர்வு குறித்து எதுவும் தெரியவில்லை. ஒரு சிலர் மட்டும் விலை உயர்வு குறித்து கேட்கின்றனர். இன்னும் ஓரிரு மாதங்களில் இதன் பாதிப்பு பெரும் அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

‘வாட்’ என்றால்..

ஒரு பொருள் உற்பத்தியாகும்போது பல கட்டங்களில் (உதாரணமாக பருத்தியில் இருந்து சட்டையாக மாறுவது வரை) வரி விதிப்புக்கு உள்ளாகிறது. இதனால், பொருளின் உற்பத்தி விலை கூடுகிறது. நுகர்வோருக்கு அந்த பொருள் அதிக விலையில் விற்கப்படுகிறது. இந்த முறையால் நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மதிப்பு கூட்டு வரி (வாட்) என்பதும் விற்பனை வரிதான். ஆனால், பல கட்டங்களில் ஒரு பொருள் கைமாறும்போது கூடுகின்ற விலையின் அடிப்படையில் வாட் விதிக்கப்படுகிறது. விற்பனையாளர் செலுத்திய வரிக்கான செலவு குறிப்பிட்ட பொருளின் விலையிலேயே அடங்கி இருக்கும். இந்த வரியை நுகர்வோரே ஏற்க வேண்டும். விற்பனையாளர், தான் செலுத்திய வரியை நுகர்வோர் தலையில் கட்டி விடுகிறார். எனவே, மதிப்பு கூட்டு வரியும் ஒரு மறைமுக வரிதான். இப்போது ஒவ்வொரு பொருளுக்கும் தமிழகத்தில் வாட் வரி கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளதால் எல்லா தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பவருக்கு பத்து மடங்கு ஏற்றம்

அகில இந்திய நிலத்தரகர்கள் நலச்சங்க அகில இந்திய தலைவர் ஏ.ஹென்றி கூறியதாவது: தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பால் பவர் பத்திரம் கட்டணம் ரூ.50லிருந்து பல மடங்கு, அதாவது, 200 மடங்கு அதிகரித்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குத்தகை பத்திரத்திற்கு ரூ.5000 லிருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல், குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சொத்தை பவர் வழங்குவதற்கு இதுவரை பதிவு கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்பட்டது. 10 மடங்கு அதிகரிக்கப்பட்டு ரூ.1000மாக உயர்த்தப்பட்டுள்ளது. வெளிநபர்களுக்கு பவர் வழங்குவதற்கு இது வரை ரூ.1000 பதிவு கட்டணமாக வசூல் செய்யப்பட்டு வந்தது, ரூ.10 ஆயிரமாகவும், உரிமை ஆவணங்கள் வைப்பு உடன்படிக்கை ஆவணம் (டெபாசிட் ஆப் டைட்டில்ஸ்) பதிவு கட்டணம் ரூ.1000லிருந்து ஸி 5,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான். அரசு இலவசம் இலவசம் என்று அறிவித்து பொதுமக்களை எதிர்க்க தொடங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments: