புதுடில்லி: காங்., அமைச்சரவையில் ஊழல் புகார் காரணமாக பல்வேறு மத்திய அமைச்சர்கள் பதவி இழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தொலைதொடர்பு துறை அமைச்சராக இருக்கும் கபில்சிபல் தனது பதவியை இழப்பார் என்று டில்லி வட்டாரம் உறுதியாக தெரிவிக்கிறது.
ஐ.பி.எல்.,ஏலம் முறைகேடு, ஸ்பெக்டரம் ஊழல், காமன்வெல்த், ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல் என வரிசையாக வெளிவந்த ஊழல் காரணமாக மத்திய அரசு நிர்வாக ரீதியான அக்கறை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் சசிதரூர், ராஜா, தயாநிதி, முரளிதியோரா ஆகியோர் தங்களுடைய அமைச்சர் பதவியை இழந்துள்ளனர். மகாராஷ்ட்டிர காங்அரசு ., முதல்வர் அசோக்சவான் ராஜினாமா செய்தார். இந்நிலையில் அடுத்தக்குறி இந்தியாவில் பிரபல வக்கீல் என பெயர் எடுத்த கபில்சிபல் அடிபடுகிறது. மத்திய அமைச்சரவையில் ( 2007 ம் ஆண்டு ) முதலில் பொறுப்பேற்றபோது அவருக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஏற்பட்ட மாற்றத்தில் மனிதவளம் மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டது. ராஜா வகித்து வந்த தொலைதொடர்பு துறை தற்போது இவரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. இவர் அமைச்சராக பொறுப்பேற்றதும் ராஜா அரசுக்கு ஏற்படுத்திய நஷ்டம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அல்ல, மிக சொற்றபமான 30 ஆயிரம் கோடிதான் என்றும் நியாயப்படுத்தினார்.
இந்நிலையில் லோக்பால் வரைவு மசோதா கமிட்டியில் கபில்சிபலுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த மசோதா உருவாக்குவதில் மக்கள் சார்பில் நியமிக்கப்பட்ட சமூக ஆர்வலகளுடன் கருத்து வேறுபாடு எழுந்தது. இவரது அணுகுமுறை சரியில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தபோது : இது ஒருப்பக்கம் பிரச்னையாக கபில்சிபலுக்கு இருந்து வரும் நேரத்தில் மற்றொரு பூதாகரமான புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை வாஷிங்டனில் உள்ள இந்திய தணிக்கை குழு தெரிவித்துள்ளது. இதன் விவரம் வருமாறு : கபில்சிபல் முதலில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தபோது வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொழில் மற்றும் அவர்களது நிலையை அறிய கனவுத்திட்டம் என்று ஒன்று அறிவிக்கப்பட்டது. இந்த விவரங்கள் சேகரிப்பதற்காக அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் போனிக்ஸ் ரோஸ் எல்.எல்.சி., என்ற கம்பெனிக்கு பணியை கொடுத்து உத்தரவிட்டுள்ளார். இந்த பணிக்கென ஒரு லட்சத்து 20 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய 5 கோடியே 43 லட்சத்து 24 ஆயிரம் என தொகை ஒப்பந்தம் ஆனது . ஆனால் இந்த பணி தொடர்பான முதல்கட்டம் துவங்கியதும் 3 தவணையாக ஏறக்குறைய 75 சதவீதத்திற்கும் மேலாக பணம் வழங்கப்பட்டு விட்டது .
நிதிக்கொள்கைக்கு எதிரானது : இந்த கம்பெனி 16 சதவீத பணிகள் மட்டும் முடிந்துள்ள நிலையில் பணம் இவ்வளவு அவசரமாக வழங்கப்பட்டது ஏன் என தணிக்கைகுழு தற்போது கேள்வி எழுப்பியுள்ளது. சுமார் 5 லட்சம் பேர் நிலவரம் குறித்த விவரத்தில் முதல்கட்டத்தில் 20 ஆயிரம் பேர் குறித்த விவரமாவது தயாரித்திருக்க வேண்டும், ஆனால் 3 ஆயிரத்து 300 பேர் தகவல் மட்டும் ரெடியானது. இந்த நிலையில் 2 வது கட்ட பணிக்கும் பணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தேவையற்ற செலவீனம் என்றும் இது மத்திய அரசுக்கு இழப்பு என்றும் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள தணிக்கை குழு நிர்வாகி கூறியிருக்கிறார். இந்த அறிக்கை வரும் பார்லி ., கூட்டத்தொடரில் தணிக்கை குழு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்டிருப்பது நிதிக்கொள்கைக்கு எதிரானது என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாருக்கு கபில்சிபல் என்ன பதில் கூறப்போகிறார். ஏற்கனவே கபில்சிபல் மீது உள்ள ரிலையன்ஸ் கம்பெனிக்கு சாதகமாக நடந்து கொண்ட நேரத்தில் இந்தப்புகார் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.
இன்று சுப்ரீம் கோர்ட் உத்தரவு என்னவாக இருக்கும் ? : இந்நிலையில் கடந்த வாரம் ரிலையன்ஸ் நிர்வாகம் யூனிபைடு அக்சஸ் சர்வீஸ் முறைகேடு தொடர்பாக தொலை தொடர்பு ஆணையம் ரூ. 650 கோடியை அபராதமாக விதித்தது. ஆனால் கபில் சிபல் ரூ. 5 கோடியாக குறைத்து உத்தரவிட்டார். இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்காக தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. இந்த விசாரணையில் எவ்வித உத்தரவு வருமோ என்று மத்திய அமைச்சகம் முழுக்கவனத்துடன் எதிர்நோக்கியுள்ளது. இந்த விகவாரத்தில் கபில்சிபலுக்கு எதிராக விமர்சனம் வரும்பட்சத்தில் விரைவில் இவர் பதவிக்கு ஆபத்து வரக்கூடும் என தெரிகிறது.
No comments:
Post a Comment