புதுடில்லி : டில்லி ராம்லீலா மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த யோகா குரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது போலீசார் எடுத்த நடவடிக்கைக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் கறுப்பு பணம் வெளிக்கொண்டு வருவது தொடர்பாக பாபா யோகா குரு ராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் டில்லி ராம்லீலா மைதானத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்.
இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது டில்லி போலீசார் நள்ளிரவில் அனைவரையும் அப்புறப்படுத்தினர். கண்ணீர் புகை, தடியடி நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்தது. இந்த விசாரணையில் மத்திய அரசு, டில்லி போலீசார் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பபட்டிருந்தது. இதனை நியாயப்படுத்தி டில்லி போலீசார் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் ராம்தேவ் தமதுநிலையிலான விளக்கஉரையை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் டில்லியில் நடந்த சம்பவத்திற்கு உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் ப.சிதம்பரமே முழுப்பொறுப்பு அவர்தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார். இவர் சார்பில் ஆஜரான ராம்ஜெத்மலானி , கோர்ட்டில் வாதிடும்போது இதற்கு காரணமான சிதம்பரத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இது தொடர்பாக முடிவு எடுக்க வரும் 25 ம்தேதிக்கு கோர்ட் வழக்கை தள்ளி வைத்தது. மேலும் இந்த வழக்கில் ராம்தேவ் ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின்படி போலீஸ் அதிகாரிகள் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தூங்கி கொண்டிருந்த ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை வீசும் அளவிற்கு என்ன நடந்தது என்றும் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.
No comments:
Post a Comment