புதுடெல்லி:இரண்டாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது அமைச்சரவை மறு சீரமைப்பில் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் அமைச்சர் குருதாஸ் காமத் ராஜினாமா செய்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங்கின் அமைச்சரவை மறு சீரமைப்பில் உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சராக பதவி வகித்து வரும் குருதாஸ் காமத்திற்கு குடிநீர் மற்றும் சுகாதார மேம்பாடு இலாகா தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. தனி பொறுப்பு அமைச்சர் என்பதால் அவர் மீண்டும் நேற்று பதவி ஏற்றிருக்கவேண்டும். ஆனால் அவர் நேற்று பதவி ஏற்க வரவில்லை.
இந்நிலையில் குருதாஸ் காமத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து மும்பையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும், காங்கிரஸ் ஊழியனாக தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுக்குறித்து பிரதமர் மற்றும் சோனியாகாந்திக்கு தனிப்பட்ட ரீதியில் கடிதம் எழுதியுள்ளதாகவும் காமத் தெரிவித்துள்ளார்.
மத்திய இரசாயனம் மற்றும் உரத்துறை இணை அமைச்சராக பதவி வகிக்கும் ஸ்ரீகாந்த் ஜெனாவிற்கு கூடுதல் பொறுப்பாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் துறை வழங்கப்பட்டது. ஆனால் அவரும் கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில் நேற்றைய பதவி பிரமாண நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் கூட்டணி நிர்பந்தம் காரணமாக எனது பதவி உயர்வு தடுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். தன்னுடன் அமைச்சரவையில் இடம்பெற்ற பேனிபிரசாத் வர்மாவுக்கு காபினட் அமைச்சர் பதவியை கிடைத்த பொழுது தன்னை புறக்கணித்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் உள்ளார் ஜெனா.
சட்டத்துறை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதற்கு வீரப்ப மொய்லி அதிருப்தியடைந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சுயநல சக்திகளின் தீவிரமான பிரச்சாரத்திற்கு பலியாக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment