அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, July 13, 2011

பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் தங்கக் குவியல்?

திருவனந்தபுரம் பதமாநாப சுவாமி கோயிலின் குளத்திலும் தங்கக் குவியல் உள்ளதாக திருவாங்கூர் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் கூறியுள்ளார்.

நீண்ட நாள்களாகத் திறக்கப்படாமல் இருந்த திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் ரகசிய அறைகளைத் திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவற்றைத் திறக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நீதிபதிகள் குழுவினர் ரகசிய அறைகளை திறந்து நகைகளை கணக்கிடும் பணியில் ஈடுபட்டனர். பி அறையை தவிர மற்ற நிலவறை தவிர மற்ற 5 ரகசிய அறைகளும் அடுத்தடுத்து திறக்கப்பட்டன. அவற்றில் பழங்கால அரிய வகை தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என பல லட்சம் கோடி மதிப்பு பெறும் பொக்கிஷங்கள் இருந்தன. இவற்றின் இன்றைய மதிப்பு சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்கள் எனக் கூறப்படுகிறது.
 

இதற்கிடையே 150 வருடங்களாக திறக்கப்படாமல் பூட்டிக்கிடந்த பி அறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அறையின் பெரிய மரக்கதவு உடைக்கப்பட்டு உள்ளே சென்ற போது அங்கு மேலும் பல்வேறு அடுக்கு அறைகளை கொண்டு காணப்பட்டது. மேலும் பி அறையை திறப்பதற்கு மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த அறையைத் திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர். ஆனாலும் பி அறையை திறக்க நீதிபதிகள் குழு முயற்சி மேற்கொண்டனர்.
 

இதை எதிர்த்து மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மார்த்தாண்ட வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அந்த அறையை திறக்க இடைக்காலத் தடை விதித்துள்ளனர். 


இந்நிலையில் பத்மநாப சுவாமி கோயிலின் தெப்பக்குளத்திலும் தங்கக் குவியல் இருப்பதாக திருவாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் பிரதாப் கிழக்கே மடம் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பத்மநாப சுவாமி கோயில் 9 என்ற எண்ணை அடிப்படையாக கொண்டு ஆகம விதிகளின்படி கட்டப்பட்டதாகும். 9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள கோயிலைச் சுற்றி 9 கோட்டைகளும் உள்ளன. முக்கிய வாசல் முன்பாக உள்ள பத்ம தீர்த்த குளத்தில் 9 கல் மண்டபங்கள் உள்ளன.

பத்மநாப சுவாமி கோயிலில் உள்ள 5 அறைகளில் நகை குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. பி அறை திறக்கப்படாமல் உள்ளது. ஆகம விதிப்படி 9 அறைகள் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இவற்றில் 6 அறைகள் கோவிலுக்குள் உள்ளன. 3 அறைகள் குளத்துக்குள் அமைந்துள்ள கிணறுகளாக உள்ளன. இந்த கிணறுகளே 3 ரகசிய அறைகளாக இருந்துள்ளன.

திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா காலத்தில் நேபாளத்தில் உள்ள கண்டிகா நதியில் இருந்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாலகிராம் புனித கற்கள் கொண்டு வரப்பட்டு இங்கு மூலவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை அமைக்கப்பட்ட பின்பு மீதமுள்ள சாலகிராம் கற்களும் நகைகளும் பத்ம தீர்த்த குளத்தில் உள்ள 3 கிணறுகளில் போடப்பட்டுள்ளன. எனவே ரகசிய பாதாள நிலவறைகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருப்பது போல பத்மதீர்த்த குளத்தின் கிணறுகளிலும் பல கோடி மதிப்பிலான பொற்குவியல் இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: