அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, July 11, 2011

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவு:முதல்வர் அறிவிப்பு..

சென்னை:கடந்த ஆட்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால், பொதுமக்களை மிரட்டி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்க, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகம் முழுவதும், நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், நிலத்தை மீட்கவும் தனி போலீஸ் பிரிவு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகம் முழுவதும், தனியார் மற்றும் விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்கள், பல வகைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டன. விற்பனைக்கு வந்த வீடுகள் மிரட்டி பறிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிலர், நில உரிமையாளர்களை மிரட்டி குறைந்த விலைக்கு, நிலங்களை அபகரிப்பதாக புகார் எழுந்தது.ரியல் எஸ்டேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குறைந்த விலைக்கு நிலம் வாங்கியதில், பலர் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், தமிழகம் முழுவதும், அரசியல் கட்சியினர் மீது நில மோசடி புகார்கள் குவிகின்றன. போலீசாரும் சளைக்காமல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கையை துவங்கியுள்ளனர். பெரும்பாலான இடங்களில், தி.மு.க.,வினர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.

1,449 புகார்கள்: இந்நிலையில், நில ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களிடமிருந்து நிலத்தை மீட்க தனி போலீஸ் பிரிவை அமைத்து, முதல்வர் ஜெயலலிதா அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா விடுத்த செய்திக்குறிப்பு:தி.மு.க., ஆட்சியில், (2006-2011) தி.மு.க.,வினரால் தனியார் நிலங்கள் அபகரிப்பு மற்றும் கட்டாய விற்பனை பெருமளவில் நடந்தன. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில்,"கருணாநிதியின் குடும்பத்தினராலும், தி.மு.க., அமைச்சர்களாலும், அவர்களது கூலிப்படைகளாலும் மக்களை அநியாயமாக மிரட்டி, பறிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்களை மீட்டு, உரியவர்களிடம் திருப்பிக் கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்' என, அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

நில அபகரிப்பு தொடர்பாக, கடந்த ஆட்சியின் போது பல புகார்கள் அளிக்கப்பட்டிருந்தும், எவ்வித நடவடிக்கையும் தி.மு.க., அரசு எடுக்கவில்லை.இம்மாதம் 1ம் தேதி வரை, தமிழகம் முழுவதும் நில அபகரிப்பு குறித்து, 1,449 புகார்கள் போலீசுக்கு வந்துள்ளன. பல புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அவற்றை போலீஸ் நிலையங்களில் விசாரிப்பது மிகவும் கடினமானது.எனவே, நில அபகரிப்பு வழக்குகளை பதிவு செய்து, தகுந்த விசாரணை மேற்கொள்ள,போலீஸ் துறையில், தனியாக சிறப்பு பிரிவு ஒன்றை போலீஸ் தலைமை அலுவலகத்திலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளேன்.

இச் சிறப்பு பிரிவு, கடந்த தி.மு.க., ஆட்சியில், 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான புகார்கள் மீது, விசாரணைகள் மேற்கொண்டு, மோசடியில் ஈடுபட்டோர் மீது, இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின் கீழ், தக்க நடவடிக்கை எடுக்கும். இதன்மூலம், மீட்கப்பட்ட நிலங்கள் உரியவர்களிடம் சட்டப்படி வழங்கப்படும். இந்த நடவடிக்கையால், நிலத்தை இழந்தவர்களுக்கு தங்கள் நிலங்கள் திரும்பக்கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஜெயலலிதாவின் இந்த அதிரடி அறிவிப்பால், தமிழகம் முழுவதும் உள்ள நில ஆக்கிரமிப்பாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. போலீசார் ஏற்கனவே நில மோசடிக்காரர்கள் மீது எடுத்துவரும் நடவடிக்கையுடன், சிறப்புப்பிரிவு நடவடிக்கையும் பாய்வதால், பலர் தலைமறைவாகி வருகின்றனர். போலீசுக்கு பயந்து, வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் தப்ப முயற்சிப்பதை தடுக்க போலீசார் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். இதற்காக, சம்பந்தப்பட்ட புகார் ஆவணங்களில் உள்ள தகவல்களை திரட்டி உரிய நடவடிக்கை எடுப்பதில் அதிக கவனம் செலுத்துவதாக கூறப்பட்டது.

No comments: