அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Thursday, July 14, 2011

மாணவனைக் கடத்தி பணம் பறிக்க முயன்ற காதல் தம்பதிகள் கைது!

சேலம் தாத்தகா பட்டி வசந்த நகர் 2 ஆவது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடதாஸ் பட்டுப்புடவைகளுக்கு டிசைன் செய்ய உதவும் அட்டைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அவருடைய மகன் ஹரிகிருஷ்ணராஜ் (16). சேலம் அடுத்த மல்லூரில் தனியார் பள்ளியில் +1 படித்து வருகிறார்.

கடந்த 10 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாணவர் ஹரிகிருஷ்ணராஜ் வீட்டிலிருந்தபோது இரவு 9 மணிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஹரிகிருஷ்ணராஜ் உடைகளை மாற்றிக்கொண்டு புறப்பட்டபோது பெற்றோர்கள் இடைமறித்து, எங்கே செல்கிறாய்? என்று கேட்டதற்கு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்யப்போவதாக கூறிச் சென்றான்.அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் சேலம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
 

இந்நிலையில், மாணவனின் தந்தை வெங்கடதாசுக்கு 12-ஆம் தேதி காலை ஒரு போன்அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம ஆசாமி மிரட்டும் தொனியில், "உன்மகன் உயிரோடு வேண்டுமென்றால், ரூ.5 லட்சம் பணத்தை கொடுக்க வேண்டும்'' என்று கூறி தொடர்பை துண்டித்தான்.அதிர்ச்சி அடைந்த அவர், போனில் வந்த மிரட்டல் குறித்து அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரிடம் தெரிவித்தார்.அதன் பின்னர்தான் மாணவன் கடத்தி செல்லப்பட்டுள்ள விவரம் தெரியவந்தது.
 

மாநகர கமிஷனர் சொக்கலிங்கம் உத்தரவின் பேரில் துணை கமிஷனர்கள் பாஸ்கரன்,ரவீந்திரன் மற்றும் உதவி கமிஷனர் காமராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், சூரியமூர்த்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் அடங்கிய 2 தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் மாணவன் வீட்டில் புலன் விசாரணை நடத்தினார்கள். மாணவன் வீட்டில் இருந்த லேண்ட் லைன் போனில் காலர் ஐ.டி. கருவிபொருத்தி, பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட போன் அழைப்பு எந்த எண்ணிலிருந்து வந்தது? என்று விசாரணை நடத்தினார்கள்.
 

விசாரணையில் அந்த போன் அழைப்பு, மாணவர் ஹரிகிருஷ்ணராஜ் வைத்திருந்த செல்போன் எண்ணிலிருந்து வந்தது என கண்டறியப்பட்டது.அதன் பிறகும் பணம் கேட்டு ஏற்கனவே மிரட்டல் விடுத்த அதே ஆசாமி போனில் தொடர்பு கொண்டு, பணத்தை எங்கு, எப்போது கொண்டுவரவேண்டும் என தெரிவித்தான். ஒவ்வொரு முறையும் இடத்தை மாற்றியதால் போலீசார் குழப்பமடைந்தனர்.மாணவனின் புதிய நண்பர்கள் யாரேனும் கடத்தல் நாடகம் ஆடுகிறார்களா? என்று பல்வேறு கோணங்களிலும் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர்.
 

இந்த நிலையில் செல்போன் டவர் வந்த இலக்கை குறிவைத்து போலீசார் ஆராய்ந்தபோது, அது சேலம் குகை பகுதியில் அருண் (24) என்பவர் வீட்டிலிருந்து வந்ததை கண்டறிந்தனர். உடனே போலீசார் அருண் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அருண் போலீசாரிடம்,``ஹரிகிருஷ்ணராஜ் எனக்கும் நண்பர்தான். அவரது அப்பா வெங்கடதாஸ் செய்கிற நெசவுத்தொழிலையே நானும் செய்கிறேன்.எனவே நட்புரீதியாக பழக்கம், அடிக்கடி தனது வீட்டிற்கு ஹரிகிருஷ்ணராஜ் வந்துசெல்வது வழக்கம். நானும் அவர்கள் வீட்டிற்கு செல்வேன்'' என்றும் தெரிவித்தார். அருணின் மனைவி பெயர் கெளரி (20). இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
 

அருண் வீட்டில் மாணவர் இல்லை என அறிந்த போலீசார் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இந்த நிலையில் நேற்று அதிகாலை வசந்தநகர் பகுதியில் ஹரிகிருஷ்ணராஜ் தனியாக நிற்பதாக ஏற்கனவே செல்போனில் மிரட்டிய நபர் பேசினார். உடனே பெற்றோரும், போலீசாரும் அங்கு சென்று மாணவனை மீட்டனர். புகார் கொடுத்து 30 மணி நேரத்தில் மாணவர் மீட்கப்பட்டார்.
 

போலீசார் மாணவர் ஹரிகிருஷ்ணராஜிடம், ந்டத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.கடத்திச் சென்ற ஆசாமிகள் மாணவனை நன்கு மிரட்டியதை அறிந்து, போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் மாணவனை கடத்தி சென்றது செல்போன் டவர் அடையாளம் காட்டிய அருண்-கெளரி காதல் தம்பதிகள்தான் என்பதை உறுதி செய்து கொண்டு கைது செய்தனர்.
 

இந்தகடத்தல் சம்பவம் பற்றி சேலம் கமிஷனர் சொக்கலிங்கம் கூறியதாவது: ஹரிகிருஷ்ணராஜின் தந்தை வெங்கடதாஸ் மூலம் தொழில் ரீதியாக அருணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.வீட்டில் பட்டுசேலை பார்டர் டிசைனுக்கு மணிகண்டன் என்பவரை வெங்கடதாஸ் வேலைக்கு அமர்த்தியிருந்தார். மணிகண்டனுக்கும் அருணுக்கும் இடையே தகராறு ஏற்படுவதுண்டு. எனவே, மணிகண்டனை வேலையை விட்டு நீக்குவதற்கு அருண் சதித்திட்டம் தீட்டி,அதற்கு பகடைக்காயாக மாணவன் ஹரிகிருஷ்ணராஜை பழக்கமாக்கினார்.
 

வெங்கடதாஸ் வீட்டில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை மாணவன் மூலம் அருண் தெரிந்து கொண்டார். வெங்கடதாஸ் தனது மூத்த மகள் திருமண ஏற்பாட்டை செய்து வருவதாகவும், அதற்காக ரூ.5 லட்சம் வரை பணம் வைத்திருப்பதையும் அருண் அறிந்துகொண்டு ஹரிகிருஷ்ணராஜை அருண்தான் தொலைபேசியில்ஆசை வார்த்தைகூறி வரவழைத்துள்ளார். அருணின் சதித்திட்டம் தெரியாத ஹரிகிருஷ்ணராஜ், வீட்டை விட்டுவெளியே வரவும்,அருண் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு குகையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார்.
 

அங்கு மாணவனை சிறைவைத்து அருண் மிரட்டியிருக்கிறார்.மாணவனின் செல்போனிலேயே பேசி அவனது பெற்றோரிடம் ரூ.5 லட்சம் பணத்தை கேட்டு மிரட்டி பழியை, வெங்கடதாஸ் வீட்டில் வேலைபார்க்கும் மணிகண்டன் தலையில் சுமத்த திட்டம் தீட்டி இருக்கிறார்.
 

போலீசார் அருண் வீட்டிற்கு முதலில் சென்றபோது, மாணவர் ஹரிகிருஷ்ணராஜும் வீட்டில்தான் இருந்துள்ளான். போலீசாரின் வளையத்தில் இருப்பதை அறிந்து கொண்ட அருண், சிறைவைக்கபட்ட ஹரிகிருஷ்ணராஜை மிரட்டி வீட்டின் மாடியில் மறைந்திருக்க செய்துள்ளார்.போலீசார் நெருங்கிவிட்டார்கள் என்பதை உணர்ந்த அருண், தனது திட்டத்தை மாற்றி,மாணவன் ஹரிகிருஷ்ணராஜிடம்,``அடைத்து வைத்த விபரத்தை யாரிடமும் சொல்லக்கூடாது'' என மிரட்டி வீட்டிற்கு செல்லுமாறு அருண் அனுப்பி இருக்கிறார்.
 

போலீசாரின் நுட்பமான தகவல் பரிமாற்றம் மூலம் கடத்தப்பட்ட மாணவர் இருக்கும் இடத்தை அறிந்து, அவனை மீட்பதற்கு பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.சம்பவம் நடந்து 30 மணி நேரத்தில் மாணவன் மீட்கப்பட்டு, கடத்திச் சென்ற காதல் தம்பதிகளான அருண்-கெளரி ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என்று கமிஷனர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.

No comments: