அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, July 13, 2011

பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள்!

பரமக்குடி மற்றும் பார்த்திபனூர் அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளிடம் இருந்து ஆபாசப் புத்தகங்கள், காதல் கடிதங்கள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் மாணவர்களிடையே மோதல்கள் இருப்பதாக புகார்கள் வந்தன. இதன்பேரில் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் செவ்வாய்க் கிழமயன்று பரமக்குடிக்கு வந்தார். அவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் சோதனை நடத்தினார்.

மாணவர்களின் புத்தகப்பைகளை எடுத்து பார்த்தபோது ஆபாச புத்தகங்கள், செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் பறிமுதல் செய்தார். இந்த சோதனையின்போது சில மாணவர்கள் அவசர அவசரமாக தாங்கள் வைத்திருந்த ஆபாச புத்தகங்கள், செல்போன்கள் ஆகியவற்றை ஜன்னல் வழியாக வீசி எறிந்தனர்.

இதைப்பார்த்ததும் உடனடியாக அவர்களை கையும் களவுமாக பிடித்தார். அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பள்ளியை விட்டு நீக்குமாறு உத்தரவிட்டார். இதனால் அதிர்ந்து போன மாணவர்கள் தங்களை மன்னித்துவிடுமாறு கூறி கதறினர். இதன்பின் அவர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை வழங்கினார். இனிமேல் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என கூறினார்.

இதன்பின் பார்த்திபனூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அவர் சென்றார். அங்கும் மாணவர்களிடம் இருந்து ஆபாச புத்தகங்களையும், மாணவிகள் வைத்திருந்த பைகளில் சோதனையிட்டபோது சில மாணவிகள் காதல் கடிதங்கள் வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவற்றை பறிமுதல் செய்தார்.

பின்னர் முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாணவர்கள் நலனில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் அக்கறை செலுத்த வேண்டும். ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை கண்டிக்க வேண்டும். தொடர்ந்து ஒழுங்கீனமான செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் அவர்களை பள்ளியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகமான குற்றச்செயல்களில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தான் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து ஒழுங்கீனமாக ஈடுபட்டால் அவர்கள் பள்ளியை விட்டு நீக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments: