அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Sunday, January 18, 2009

பழனிபாபாவின் 12ம் ஆண்டு நினைவு நாள் கவிதாஞ்சலி

பாபா.. எங்கள் பழனி பாபா...

பாபா...

மனிதநேயத்தை

எங்களுக்கு

அறிமுகம் செய்து

வைத்த ஆசானே!

மத நல்லிணக்கத்தை

மதிக்கச்சொன்ன மகானே!

மனிதரில் புனிதனே!

மங்காத சுடரொளியே!

பகுத்தறிவை எமக்கு

போதித்த அறிவொளியே!

உண்மைக்கு

குரல் கொடுத்தாய்!

உரிமையைக் காக்க

உயிரையே கொடுத்தாய்!

நீ

மொழியால் தமிழன்

இனத்தால் திராவிடன்

தேசத்தால் இந்தியன்

மார்க்கத்தால் முஸ்லிமென்றும்

என்னைச்

சிறையில் அடைத்தாலும்

சிலுவையில் அறைந்தாலும்

சித்திரவதை செய்தாலும்

சீரான மார்க்கம் விட்டு

சிறிதளவேனும் மாறேனென்று

மார்தட்டிச் சொன்னாயே!

எங்களுக்கு

தளபதியாய் முன்னின்று

களம் அமைத்துக் கொடுத்தாய்!

கலங்கரை விளக்காக

நலம் பல புரிந்தாய்!

நாங்கள் உன்னை

பாபா.. பாபாவென்றே

பாசத்துடன் அழைப்போம்..!

நீ எங்களை

அத்தா.. அத்தாவென்றே

அன்பொழுக அழைப்பாய்!

நூற்றி இருபத்தாறு முறை - நீ

சிறை சென்றாய்;

அத்தனை முறையும்

நீதான் வென்றாய்!

சட்டம் உன்னிடம் மட்டும்

சரண் அடைந்தது!

நான்

சிறையில் உன்னைச்

சந்தித்த நாளை

மறக்கவே இல்லை!

பழங்கள் கொண்டு வந்தேன்..

பணியாரம் செய்து வந்தேன்...

வெளிநாட்டிலிருந்து

வாசனை திரவியமும்

வாங்கி வந்தேன்!

ஆனால் நீயோ...

செடிகள் கொண்டு வா

பறவைகள் வாங்கி வா

சிறையின் அறையைச்

சுத்தம் செய்திட

சுண்ணாம்பு கொண்டுவா என்றே

ஒவ்வொறு முறையும்

ஒவ்வொன்றாய் கோட்பாய்...!

எத்தனைச் சிறைகள்...

அத்தனையிலும் நீ

பதியம் வைத்த

கன்றுகளெல்லாம் - இன்று

மரங்களாய்...

விருட்சங்களாய்...

உன் நினைவுச் சின்னங்களாய்...

நிழல் தருகின்றன...!

உன்னை வரவேற்க

ஒவ்வொரு சிறையும்

ஆவலாய்க் கத்திருக்கும்!

ஆம்...!

அவைகளுக்குள் - நீ

அடைபடும் நாள் - அவைகளுக்கு

போகிப் பண்டிகை நாள்!

அதற்கு அடுத்தநாளில் - வெள்ளைச்

சுண்ணாம்புச் சட்டையை

சுவர்கள் போட்டுப் பார்க்கும்!

கிழவனின் பொக்கை வாயாய்ச்

சிரிக்கும் தரையின் குழிகளைச்

சிமெண்ட் கலவையால்

சரிசமம் செய்வாய்!

உனக்குத்தான் - எதையும்

சரிசமம் ஆக்குவதில்

சலிப்போ வராதே!

பழையன கழிந்திடவும்

புதியன புகுந்திடவும்

பாதை அமைத்துத்

தந்தவர் நீங்கள்!

சிறைச் சாலையில் - உன்

அதிகாரம் எப்போதும்

கொடிகட்டிப் பறக்குமே!

வெளியில் நீ பேசினால்

கருஞ் சட்டைப்படை

ஆவலாய் கேட்கும்!

உள்ளே பேசினால்

காவலர் படையும்

ஆவலாய் கேட்கும்!

கைதிகள், காவலர்கள்

பார்வையாளர்கள் என்ற

பாகுபாடு பார்க்காது

போதனைகள் செய்வாய்!

நீ

பாடம் எடுக்கும்

பாணியே அலாதிதான்!

கழுவும் மீனில்

நழுவும் மீன்போல

பொடி வைத்துப் பேசுவாய்!

வெடியாய் வெடிக்கும் - உன்

வார்த்தைகளுக்கு

விடை தெரியாத

விலங்குகள் கூட்டம்

வெறிப்பேச்சு என்றே

விளக்கம் கொடுக்கும்!

கலவரம் வருமென்றே

காவிக்கூட்டமும்

காக்கிக் கூட்டமும்

ஊரையே மிரட்டும்...

உளுத்தரைக் கூட்டும்...!

உன்னால் கலவரம்

வந்ததே இல்லையென்ற

உண்மை விவரம்

உலகே அறியும்!

எங்களுக்காக...

எவரையும் எதிர்ப்பாய்..!

எங்களைக் காக்க

உன்னையே கொடுப்பாய்!

எங்களை எதிர்க்க

எவருக்கும் பயம்..!

அது

அந்தக்காலம்..!

சிறைகளை நாங்கள்

சந்தித்து உண்டு!

வெளியெ நாங்கள்...

உள்ளே நீ...!

ஆனால் - இப்போது

உன் தம்பிகள் யாவரும்

உள்ளே... சிறைக்குள்ளே...

நம் தலைவர்கள் (?) யாவரும்

உல்லாசமாக... எதிரிகளோடு

சல்லாபம் செய்தபடி...

சந்தோசமாக...

போனால் போகட்டும்...

போய்த் தொலையட்டும்..

பிணம் தின்னும் கழுகுகளாலே

பயனொன்றும் இல்லை...

பேடிகள்.. கேடிகள்..

பிழைத்துப் போகட்டும்.. பாபா...!

பாபா...!

உன்னை

வீழ்த்தி விட்டதாய்

வெகுசிலர் நினைக்கலாம்!

ஒலி, ஒளிப் பேழைகளில்

ஒலித்துக் கொண்டும்

எங்கள் நெஞ்சில்

வாழ்ந்து கொண்டும் - நீ

இருக்கின்றாய் என்பதை

எத்தனைப் பேர் அறிவர்?

துக்கம் தொண்டையை

அடைக்குமு போதும்...

தூங்கிட உயிர்

மறுக்கும் போதும்...

கோழைகளைக் கண்டு மனம்

ஒல்தித்தெழும் போதும்...

நன்மை செய்ய

நினைக்கும் போதும்...

உண்மையைச் சொல்லி

விளக்கும் போதும்...

உந்தன் நினைவுகள்

எந்தன் நெஞ்சினில்

ஒவ்வொரு நாளும்...!

ஒவ்வொரு நாழிகையும்...!

பாபா...

வீரனாக வீழ்ந்து

வெற்றிக்கு வழிகாட்டினாய்..!

பாபா - நீ

விளைவித்த

விதைகள் நாங்கள்!

வீரமிக்கவர்கள்..

வீரியமிக்கவர்கள்...

விவேகமிக்கவர்கள்...!

பாபா - நம்

பசும்பொன் சொன்னாரே!

"விவேகமில்லாத வீரம்

முரட்டுத்தனம்!

வீரமில்லாத விவேகம்

கோழைத்தனமென்று!"

வீரத்துடனும் விவேகத்துடனும்

உன் வழிப்பாதையில்

வீழ்வது நாங்களெனினும்

வாழ்வது நன் சமுதாயமாக இருக்கட்டும்!

விரைவாய் வருவோம்..

விரைவில் வருவோம்...

வெற்றிக்கனியைப் பறித்துக்கொண்டு!

விண்ணும் மண்ணும் அதிர...

வானவர்கள் வாழ்த்தொலி முழங்க...

வரவேற்கத் தயாராய் இரு பாபா...!

ஜனவரி 28, 2002 அன்று பழனிக்கு அருகில் உள்ள புது ஆயக்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பழனி பாபாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது மண்ணறையில் அமர்ந்து இனியவன் ஹாஜி முஹம்மதுவால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதாஞ்சலி.

ஷஹீத் பழனிபாபா..

பாபா அவர்களின் தந்தை பெயர் முஹம்மது அலி, தாயார் பெயர் கதீஜாபீவி. சொந்த ஊர் பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் உள்ளது புது ஆயக்குடி என்னும் கிராமம். இதுதான் தாய்வழி பூர்வீகம். தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர். பெற்றோரின் அரவணைப்பில் சீரும் சிறப்புமாக வாழ்ந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும் குன்னூரில் உள்ள செயிண்ட் ஜோஸப் காண்வென்ட்டில் கல்வி பயின்றனர். பெற்றோர்களின் மறைவுக்குப்பின் புது ஆயக்குடியில் உள்ள முதலாளி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் தாய்மாமன் அப்துல் ரஹ்மான் அவர்களது பராமரிப்பில் பழனி கல்லூரியில் பட்டப்படிப்பை தொடங்கினார். படிக்கும் காலத்திலேயே தொடங்கிய துணிச்சலான பொதுவாழ்க்கை நடவடிக்கைகளால் குடும்பத்தார்களுக்கு சங்கடம் என்பதால் பாசப்பிணைப்புகளை விட்டு விலகி வாழ்ந்து வந்தார். இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டவர் பாபா.
எம். ஜி. ஆர். ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக சென்னைக்
கோட்டைக்குள் நுழையத் தடை என அரசானை வெளியானவுடன் தான் யார் இந்த பழனிபாபா என்று மக்கள் பார்க்கத் தொடங்கினார்கள். இந்த சந்தர்பத்தை பயன் படுத்திக்கொண்ட திமுக பாபா அவர்கள் மூலம் எம்.ஜி.ஆரை வசைபாட மேடை அமைத்துத் தந்தது.
எம். ஜி. ஆர். மறைவுக்குப்பின்
ஆட்சியமர்ந்த திமுக, இந்து மேல் ஜாதி சமூகத்தினரின் வெறுப்பை சம்பாதித்து கொள்ள விரும்பாத கலைஞர் அரசு பாபா அவர்களின் மேல் முதன்முறையாக குண்டர் சட்டத்தை பிரயோகித்து சிறைக்குள் தள்ளியது.
திமுக அரசும் தனது முதுகில் குத்திய போது
பாபாவின் சமுதாய பார்வை புதியபாதை காண வைத்தது. அரசியல் கலந்த சமுதாயப்பேச்சு தமிழகமெங்கும் அவருக்கு ஆதரவா ளர்களை பெற்றுத் தந்தது. அவரது நடவடிக்கைகள் அவரை பல வழக்குகளில் சிக்க வைத்தது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), கொடிய தடாசட்டம் ஆகியவைகளும் அவரை பதம் பார்த்தன.
முன்னாள்
குடியரசு தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களின் பதவிக்காலத்தில் அரசு பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்கு திருப்பி செலுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்தது.
பின்தொடர்ந்தோர் சிறிது காலம்
மருகி நின்றபோதும் பழனிபாபா அவர்கள் மனம் தளரவில்லை. தனது இருதிக்காலம் வரையிலும் பாட்டாளி மக்கள் கட்சியுடனும், கட்சியின் தலைவர்களுடனும் மணம் இணைந்து ஜிஹாத் கமிட்டியை அரசியல் ஈடுபாட்டோடு வழி நடத்திச் சென்றார். இஸ்லாமிய மக்களின் வாழ்வாதார உரிமைகளுக்கான போராட்டத்திற்கு அல்லாஹ்வின் பாதையில் அணி திரட்டினார். இந்த காலகட்டத்தில் தான் மதவெறி சக்திகளுக்கு பழியாகிய பாபா, 1997 ஜனவரி 28ஆம் நாள் (ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் முதல்நாள்) இரவு ஒன்பதரை மணிக்கு தனது வாகனமான ஜீப்பில் அமர்ந்திருந்த பாபா அவர்களை 6 பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் வெட்டப்பட்டு ஷஹீதானார்கள். (இன்னாலில்லாஹி..,)
பாபா அவர்களின் காலத்தில் தனது வீரவுரைகளில் ஒன்றை மட்டும் அடிக்கடி வலியுறுத்துவார், 'இஸ்லாமியர்களின் வெற்றி ஒற்றுமையில் தான் உள்ளது, வேற்றுமையில் அல்ல' என்பார். மாற்று மதச் சகோதரர்களின் அமைப்புகள் துணிந்த அளவு கூட நமது சமுதாயத்தின் அமைப்புகள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை.
அவர்
கூறிய தத்துவத்தை உள்வாங்கி இயக்கங்கள் மூலம் உண்டான பிணக்குகளை களைந்து இஸ்லாமிய சமூகத்தின் வெற்றிக்கு அல்லாஹ்வின் பாதையில் அயராது உழைப்போம் என உறுதி ஏற்போம்.

பேரருளாளன் அல்லாஹ் ஈருலகிலும் நன்மைகளை தந்தருள்வானாக..! ஆமீன்..!!

கொள்கை மாறா மறவனே..!

அரசியல் அரங்கில் அனாதைகளாக்கப்பட்ட இஸ்லாமிய சமூகத்தை 'உன் வெற்றி உன் கைகளில்' என்று கூறி அறுபதுக்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளை வென்றெடுக்க முடியும் என தன் சமூகத்திற்கு தெளிவுபடுத்தி, அனைத்து ஜமாஅத்துகளையும் ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து அதற்கு ஐக்கிய ஜமாஅத் பேரவை எணும் பெயரிட்டு தனது இறுதிக் காலங்களில் சூறாவளிப்பயணம் மேற்கொண்டு அதில் ஓரளவு வெற்றியும் கண்டார். தனது எழுச்சியுரையின் மூலம் தமிழின சமூகத்திற்கே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மார்க்கத்தால் இஸ்லாமியன்
இனத்தால் திராவிடன்
மொழியால் தமிழன்
தேசத்தால் இந்தியன்,
எனும்
புரட்சிமிகு சிந்தனையை இஸ்லாமியர்களின் நெஞ்சத்தில் விதைத்தார்.
தலித் இன சமூக
மக்களின் விடுதலைக்கு வித்திட்ட புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை தனது வரலாற்று உரைகளின் மூலம் இஸ்லாமியர் சமூகத்திற்கு அடையாளம் காட்டியவர் பழனிபாபா அவர்கள் ஒருவராகத்தான் இருக்க முடியும். அம்பேத்கார் அவர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் கட்சியை அடியோடு புறக்கணித்து விடு என ஒரு புதிய பாதையை அரசியல் களத்திலே வகுத்து தந்தவர்.
சிம்மாசனங்கள் அவரை
சிறைபடுத்திய போதும் சீரான என் மார்க்கத்தை விட்டு சிறிதளவும் பிரளமாட்டேன் என்று வெற்றிக்கும் வீர மரணத்திற்கும் இடையே போராடி ஓய்ந்த வேங்கை மனிதன் தான் பழனிபாபா.
சொல்லாலும்
, செயலாலும், புறத்தாலும், அகத்தாலும், தியாக உணர்வு ஒன்றையே நிலைப்படுத்தினார். இஸ்லாம் எனும் கட்டிடம் தியாகம் எனும் அஸ்திவாரத்தினால் உருப் பெற்றது என உலகுக்கு உணர்த்தினார். இஸ்லாமிய சமூகத்திற்குள் அனேக அரசியல் பிரிவுகள் இருக்கலாம் ஆனால், இஸ்லாமியர்கள் மத்தியில் பிளவுகளே இருக்கக்கூடாது, முடியாது என மேடைக்கு மேடை தனது சொற்பொழிவால் பிரகடணப்படுத்தினார்.
இன்றைய காலகட்டத்தில் பாபா அவர்கள் இருந்திருக்கக்கூடாதா..? என உணர்ச்சிமிக்க இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவே வருத்தமுறுவதை செவியுறும்போது பாபா அவர்கள் வகுத்துத்தந்த பாதையே இருதித் தீர்வாக இருக்க முடியும் என அறியமுடிகிறது. (isakwt@gmail. com)

No comments: