அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, January 19, 2009

வெளிநாட்டு ஜோடி திருமணத்தில் மோதல்-கோவில் மூடல

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள கோவிலில் நடக்கவிருந்த வெளிநாட்டு காதல் ஜோடியின் திருமணம் இந்து முறைப்படி நடக்கவில்லை என்று கூறி இந்து முன்னனணியினர் போர்க் கொடி உயர்த்தியதால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கோவில் மூடப்பட்டது.

திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் வெளிநாட்டினர் தங்கி உள்ளனர். அவர்களில் ஜெர்மனியை சேர்ந்த ஆன்ஸ் (45) என்பவருக்கும், அமெரிக்காவை சேர்ந்த ஜோனி (45) என்ற பெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

அவர்களுக்கு திருமணம் நடத்த தொண்டு நிறுவனம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. கிரிவலப் பாதையில் உள்ள கண்ணப்பநாயனார் கோவிலில் நேற்று காலை திருமணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

காலை 11 மணியளவில் மணமகனும், மணமகளும் தொண்டு நிறுவனத்தில் இருந்து கண்ணப்ப நாயனார் கோவிலுக்கு மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்யப்போவதாக கூறினர்.




மணமக்கள் கோவிலை அடைந்ததும் முதலில் அவர்கள் நாட்டு சம்பிரதாயப்படி சடங்குகள் செய்து அதன் பிறகு திருமணம் செய்யப்போவதாக கூறப்பட்டது.

இதனால் அங்கு நின்று கொண்டிருந்த இந்து முன்னணி மாவட்ட முன்னாள் செயலாளர் சிவபாபு என்பவர் இந்து கோவிலில் இந்து முறைப்படி தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வாக்குவாதம் செய்தார்.

கோவிலில் உள்ள வெளி மண்டபத்தில் வைத்து திருமணம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், மணமக்களை கோவில் மூலஸ்தானத்துக்குள் அழைத்து சென்று விட்டனர். மற்றவர்கள் உள்ளே என்ன நடக்கிறது என்பதை யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துக் கொண்டனர்.

பாய்ந்து வந்த ஆன்ஸ்...

இதனால் ஆத்திரம் அடைந்த சிவபாபு, கோவிலுக்குள் நுழைய முயன்றார். அவரை உள்ளே செல்ல விடாமல் திருமண கோஷ்டியினர் தடுத்ததால், மோதல் ஏற்பட்டது. அப்போது கோவில் மூலஸ்தானத்துக்குள் இருந்து ஆவேசத்துடன் வெளியே வந்த மணமகன் ஆன்ஸ், சிவபாபுவை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் கோபமடைந்த இந்து முன்னணியில் திருப்பித் தாக்க ஆயத்தமானதைத் தொடர்ந்து மணமக்கள் இருவரும் தொண்டு நிறுவனத்தினர் கொண்டு வந்திருந்த ஆட்டோவில் ஏறி தப்பினர்.

ஆனால் மற்றவர்களை அங்கிருந்து வெளியேறாமல் இந்து முன்னணியில் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் தலைமையில் போலீஸார் விரைந்து வந்தனர். விசாரணைக்குப் பின்னர் கோவில் பூட்டப்பட்டது.

இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் கோவிலை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டார்.

இந்த சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும் ஏராளமான இந்து முன்னணி தொண்டர்கள் திரண்டனர். மணமகனும், மணமகளும் தங்கி இருந்த தொண்டு நிறுவனத்திற்கு சென்றனர். அங்கு மின் விளக்குகள், நாற்காலிகளை உடைத்தனர். தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு ஆட்டோவை கவிழ்த்து, கல்லால் தாக்கினர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் இருதரப்பினரையும் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

பிறகு சிவபாபு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், இந்து கோவிலில் இந்து முறைப்படிதான் திருமணம் நடத்த வேண்டும் என்று கூறியதால் மணமகன் தன்னை தாக்கி கொலை செய்து விடுவதாக மிரட்டினார் என்று கூறி உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துளளனர். வெளிநாட்டு ஜோடியின் கல்யாணம் கலாட்டாவில் முடிந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: