அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

திருமங்கலம் தீர்ப்பு - ஒரு அலசல்

பரவலாக எதிர்பார்க்கப் பட்டது போலவே ஆளுங்கட்சியான தி.மு.க. இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் மூலம் வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்கு கிடைத்துள்ள செய்திகள் என்னவென்று பார்ப்போம்.

தி.மு.க. :

குடும்பம் மற்றும் கூட்டணியில் தொடர்ந்து விரிசல்கள் ஏற்பட்டு வரும் இந்த வேளையில் திருமங்கலம் தொகுதி வெற்றி கட்சித் தலைமைக்கு ஓரளவுக்கு திருப்தியைத் தந்திருக்கக் கூடும். அதே சமயம் ஒரு சிறிய தொகுதியில் முழு அரசு பலத்தையும் காட்ட முடிந்தது போல, அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் காட்ட முடியாது என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலை அப்போது என்னவாக இருக்கும் என்பது தொடர்ந்து கேள்விக் குறியாகவே இருப்பதாலும் நாடாளுமன்றத்திற்கு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த முடிவுகளை எடுத்துக் கொள்ள முடியாது. பொருளாதார தளர்ச்சியின் பாதிப்பு அனைத்து தரப்பினரையும் பாதித்துள்ள இன்றைய சூழலில் சாதாரணமாக மக்களின் கோபம் ஆளுங்கட்சியின் மீதே திரும்ப வாய்ப்புகள் அதிகம். இதன் காரணமாகவே, உடனடியாக தேர்தலை விரும்பாத மத்திய அரசு குறுகிய கால நோக்கில் பல பொருளாதார மீட்சி நடவடிக்கைகளை (பெட்ரோல் விலை குறைப்பு, வட்டி வீத குறைப்பு போன்றவை) எடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நடவடிக்கைகள் பெருமளவு பலன் தராத பட்சத்தில் ஆளுங்கட்சிக்கு பொதுத் தேர்தல் கடும் சவாலாகவே இருக்கும் என்று கருதுகிறேன்.

அ.தி.மு.க.:

இந்த தேர்தலின் மூலம் தி.மு.க. விற்கு மாற்றுக் கட்சியாக அ.தி.மு.கவையே மக்கள் கருதுகிறார்கள் என்பதும் மூன்றாவது நான்காவது கட்சிகள் பெருமளவு வோட்டுகளைப் பெற வில்லை என்பதும் அ.தி.மு.க. தலைமைக்கு ஆறுதல் தரும் விஷயங்கள். ஏற்கனவே சொன்னபடி, நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில் இப்போதைய பொருளாதார தளர்ச்சி நீடிக்குமேயானால், அதன் பலன் அ.தி.மு.க.விற்கே அதிகம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம், பா.ஜ.க வுடன் கூட்டணி இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில், வெற்றி பெற்றால் அ.தி.மு.க. தரப்பில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதும், புதிய ஆட்சியில் அ.தி.மு.க. வின் பங்கு என்னவாக இருக்கும் என்பது பற்றியும் அதன் தலைமை தெளிவு படுத்த வேண்டி இருக்கும். மேலும் பா.மா.க போன்ற கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது, ஆளும் கட்சிக்கு கடும் போட்டியை தர உதவும் என்று கருதுகிறேன்.

தே.மு.தி.க. :

கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலிலும் பின்னர் வந்த இடைத் தேர்தலிலும் மிகப் பெரும் நம்பிக்கைகளை ஏற்படுத்திய தே.மு.தி.க. இந்த தேர்தலில் டெபொசிட் இழந்துள்ளது இந்த கட்சியும் ம.தி.மு.க, பா.ம.க. போன்ற கட்சிகளின் நிலையை (சிறந்த துவக்கத்திற்கு பின்னர் கூட்டணி கட்சிகளில் ஒன்றாகிப் போனது) அடைந்து விடுமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிட கட்சிகளுக்கு நல்ல மாற்று போல துவக்கத்தில் தோற்றமளித்த இந்த கட்சியில் ஏற்பட்ட தலைமையின் குடும்ப தலையீடுகள் மற்றும் வாய் சவடால்கள் காரணமாக இந்த கட்சிக்கும் மற்ற திராவிட கட்சிகளுக்கும் பெரிய வேற்றுமைகள் இல்லை என மக்கள் முடிவு செய்து விட்டதாலேயே இந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகளை இந்த கட்சி பெற்றுள்ளது என்று கருதுகிறேன். இந்த நிலை தொடர்ந்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கட்சியால் எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே தோன்றுகிறது. அதே போல, பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது அகில இந்திய அளவில் ஒரு அறிமுகத்தையும், நிதி தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உதவும் என்றாலும், அதிக வாக்குகளைப் பெற்றுத் தருமா என்பது கேள்விக் குறியே. அதே சமயம், இரண்டு பெரிய கட்சிகளுடன் ஏதேனும் கூட்டணி வைத்துக் கொண்டால் ஓரளவுக்கு சீட்டுகளைப் பெற வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பத்தோடு பதினொன்றான ஒரு கூட்டணி கட்சியாக மாறி மக்கள் மதிப்பை இழக்க வேண்டி இருக்கும். எனவே இந்த தேர்தல் முடிவுகள் கட்சித் தலைமைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன்.

இதர கட்சிகள்:

கூட்டணியை மாற்ற காங்கிரஸ்சின் தமிழக கிளையின் ஒரு பிரிவினர் செய்து வந்த முயற்சிகள் இப்போதைக்கு பின்னடைவை சந்திக்கும். எந்த கட்சியுடன் கூட்டு என்ற பாமகவின் முடிவு பொதுத் தேர்தல் வரும் வரை தள்ளிப் போடப் படலாம். நான்காவது ஐந்தாவது இடம் பெற்ற கட்சிகள் ஏதேனும் ஒரு பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து (சீட்டு இல்லாமல்) போட்டி இடலாம். அல்லது ஒரு மாபெரும் (?) மூன்றாவது கூட்டணியில் இடம் பெற்று தேர்தலைச் சந்திக்கலாம்.

வன்முறை:

தமிழகம் இதுவரை காணாத வன்முறையை இந்த தேர்தல் கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. காஷ்மீர், பீகார் மாநிலங்களின் தேர்தல்களை விட அதிக வன்முறை திருமங்கலம் தேர்தலில் நடைபெற்றதாக தேர்தல் உயரதிகாரி தெரிவித்துள்ளார். கட்சிகள் இந்த தேர்தல் முடிவை கௌரவ பிரச்சினையாக நினைத்ததே இந்த வன்முறைக்கு காரணம் என்று நினைக்கிறேன். இது வருத்தத்துக்குரிய மற்றும் கடுமையாக கண்டிக்கத் தக்க விஷயம் என்றாலும், பரவலான பொதுத் தேர்தலின் போது இத்தகைய வன்முறை நிகழாது என்று நம்புகிறேன்.

ஆக மொத்தத்தில், தமிழக அரசியல் களத்தில் இரண்டு பெரிய திராவிட கட்சிகளின் ஆதிக்கமே இன்னும் சில காலத்திற்கு தொடரும் என்பதையே இந்த இடைத் தேர்தல் முடிவு காட்டுவதாக கருதுகிறேன். மேலும் இந்த இரண்டு கட்சிகளில் (கூட்டணிகளில்) நாடாளுமன்ற தேர்தலுக்கான வியுகத்தை சிறப்பாக அமைக்கிற கட்சியே (கூட்டணியே) வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.

No comments: