அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

எங்க ஊரு ஜல்லிக்கட்டு..முடிஞ்சா..

எங்க ஊரு ஜல்லிக்கட்டு..முடிஞ்சா.. அணைஞ்சுக்கோவ்வ்வ்..

கிராமத்திற்கு, டிசம்பர் மாதம் முதல் வாரத்திலேயே பொங்கல் வந்துவிடும்.அதாவது ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சு.. தெருமுக்கில் மாட்டுவண்டி சாய்த்து வைக்கப்பட்டு, நேக்காவில் இரண்டுபக்கமும் குழந்தைகள் "ஏத்துலக்கடி இறக்குலக்கடி" ஆடிக்கொண்டிருக்க, இளவட்டங்கள் வண்டியிலும் அதன் பக்கத்திலும் அமர்ந்து பேச்சை ஆரம்பிப்பார்கள்.. பெரும்பாலும் ஒரு பெரிசு ஆரம்பிக்கும்..

"ஏனப்பா.. இந்த வருஷம் என்னா பண்றாங்ங்களாம் இவெங்க.."

"யாரு பெரிசு?"

"அதானாப்பா.. ஜல்லிக்கட்டு விடுறாங்களா, இல்ல மாடு பாவம்,கொம்பு படுதுனு நொட்ட சொல்லு சொல்லி கோர்ட்டுல விடக்கூடதுனு சொல்றாங்களா?"

"அட நீ ஒருபக்கம்.. பொங்கல் அன்னிக்கு நடத்தலாம்னு சொல்லிட்டாங்க.. பாதுகாப்பு பலமா இருக்குமாம்"

"ஒக்காலி என்ன பாதுகாப்பு குடுப்பாங்கலாம்.. என் செவல மாடு நிண்டு விளையாண்டுச்சுன்னா ஒரு பய நிக்கமாட்டாங்க.. பாதுகாப்பாம்ல பாதுகாப்பு.."

இப்படி ஆரம்பித்து வைக்கப்படும் ஜல்லிக்கட்டு பற்றிய பேச்சு.. கிட்டத்தட்ட ஜனவரி முடிந்தும் தொடரும்..

வருடம் பூர இதற்காகவே உசுப்பேற்றி வளர்க்கப்படும் காளைகள்.. தங்கள் குழந்தைகளை விட அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு மாடுகள்.

"பிடிமாடு" ஆகிவிடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக.. மாட்டுக்காரர்கள் மெனக்கெடும் செயல்கள் அதிகம்.

கொம்பு சற்று வளைந்து இருக்கும் காளையை பார்த்து வாங்கி, தினமும் காலை மாலை இருவேளை குளிப்பாட்டுவார்கள்.. சூடு ஏறிவிடக்கூடாது என்பதற்காக. கடலைப்புண்ணாக்கும் பருத்தி விதையும் தினமும். மாலைவேளையில் ஊரிணி பக்கமாய் இருக்கும் மண்மேட்டில்,செம்மண்ணாய் இருந்தால் கூடுதல் விசேஷம், காளையை குத்த விடுவார்கள்.. கையில் இருக்கும் கயிறை இருவர் பிடித்திருப்பார்கள்.. ஒருவர் இழுக்க மற்றவர் தளர்த்த.. மாடு வெறி கொண்டு மண்ணை முட்டித் தூக்கும்.. ஜல்லிக்கட்டிற்கான பயிற்சி இது.அந்த தருணத்தில் அதன் மூக்கில் இருந்து வரும் கோபக்காற்றில் கீழே இருக்கும் மணல் பறந்து பயம் ஏற்படுத்தும்..

மாட்டு ஓனர் எந்த அரசியல் சார்புடையவர் என்பது மாட்டின் கொம்பில் இருக்கும் பெயிண்டில் தெரிந்து விடும்.

ஜல்லிக்கட்டு நெருங்க நெருங்க, மக்களின் நடமாட்டம் இல்லாத இடமாக பார்த்து மாட்டை பெரும்பாலும் தனிமையில் இருக்கும்படியே வளர்ப்பார்கள்.
"யாயாய்ய்ய் கண்ட்ரோழி" என்ற மந்திர வார்த்தையை உச்சரிக்க வேண்டியவர் உச்சரித்தால்தான் அடங்கும்.. வேறு யார் அருகில் சென்றாலும் கொம்பை சுழற்றும் சுழற்றில் ஐந்தாறு அடி பின்னோக்கி ஓடிவிடுவார்கள்.

மாட்டுக் கொட்டகையில் கீழே போடப்பட்டிருக்கும் பட்டியக்கல் சாதாரண கற்கலைப் போல இருக்காது.. மிக நேர்த்தியாக "கொத்திவிடப்பட்டிருக்கும்" பட்டியக்கல்லில் தான் மாடு நிற்கும்..அப்பொழுதுதான் வழுக்காது. அவ்வளவு நுணுக்கமாக வளர்க்கப்படும் இந்த காளைகள்..

மூக்குணாங்கயிறு என்பது தான் முக்கியமான கயிறு.. அதைப் பிடிக்கத் தெரிந்தவன் சிறுவனாக இருந்தாலும் பிடிப்பதில் இருக்கும் யுத்தியை வைத்து காளை மாடு பசுமாடுமாதிரி அமைதியாக செல்லும்.. அதாவது மூக்கணாங்கயிறை மேற்திசையில் ஏத்தி பிடிக்கவேண்டும்.. அப்படி பிடித்தால் மாடு பிடிப்பவரின் கன்ட்ரோலுக்கு வந்துவிடும்.

ஆனால் இது எல்லாம் குளிப்பாட்டும் பொழுதோ அல்லது தீனி வைக்கும் பொழுதோ தான்.. ஜல்லிக்கட்டு அன்று மூக்கணாங்கயிறை அறுத்து விடுவார்கள்.. இந்த மூக்கணாங்கயிறு அறுக்கும் பொழுதே அதற்குள் ஒரு பரவசம் ஏற்பட்டுவிடும்.. குத்த லைசன்ஸ் கொடுத்த மாதிரி அதற்கு.. அதனால்தான் மிக லாவகமாக வாடியின் வாசல் வரை வந்து சட்டாரென்று அறுத்து விடுவார்கள்..

வாடிவாசல்.. ஜல்லிக்கட்டிற்கு நான்கு நாட்கள் இருக்கும் பொழுதே "கமிட்டியாளர்கள்" ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில் தான் இருப்பார்கள்..பலகைகளால் ஆன மேடை.. அதற்கு தெற்கில் கீழே.. பனைமரங்களாலும் இன்னபிற மரக்கட்டைகளாலும் ஆன வாடி.. ஒரு சமயத்தில் ஒரு மாடுதான் அதனுள் நிற்க முடியும்.. அங்கிருந்துதான் காளையை அவிழ்த்து விட வேண்டும்..சற்று இருள் சூழ்ந்த அந்த இடத்தின் குறுகலாக வாசல் வழியே பார்த்தால் ஜனத்திரள் முண்டியடித்துக் கொண்டு நிற்பது தெரியும்.. அதைப் பார்க்கும் பொழுதே மாட்டிற்கு கோபமும்,ஆக்ரோஷமும் லேசான பயமும் கலந்த கலவையாக.. இந்த உணர்ச்சிகள் எந்த மாட்டிற்கு அதிகம் ஏற்படுகிறதோ அதைப்பொறுத்து வாடி வாசலில் இருந்து வெளியேறும் பொழுது அதன் தாவல் உயரம் அமையும்.. மிகுந்த ஆக்ரோஷமான மாடுகள் இரண்டாள் உயரத்திற்கு கூட தவ்வி வெளியேறும்..அதுதவிர உள்ளே ஊத்தி விடப்பட்ட சரக்கின் அளவும் அதைத் தீர்மானிக்கும்..





ஜல்லிக்கட்டில் இந்த மாடுகள் எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் மாடுபிடி வீரர்கள்.. ஏகப்பட்ட உத்திகள் கையாண்டு மாட்டை அடக்குவார்கள்.. ராமராஜன் போல பேச்சிப் பேச்சி என்று பாடிக்கொண்டிருந்தால் டங்குவார் அந்துவிடும்.. அதைவிடக் கொடுமை ரஜினி படங்களில் காட்டுவார்களே.. கொம்பை இரண்டு கைகளாலும் பிடித்து உலுக்குவாரே..அப்படி எல்லாம் செய்யவே முடியாது..குத்திக் கிழித்துவிடும்..



மனோதத்துவ மருத்துவர்கள் தோற்றுவிடுவார்கள் இந்த பிடிவீரர்களின் முன்னால்.. மாட்டின் மனநிலை மற்றும் சூழல் அறிந்து இவர்கள் செயல்படுவது அறிவியலுக்கும் அப்பாற்பட்ட விசயம்.


மாடு பிடி நேக்கு என்பது.. வாடி வாசலில் மிகச் சாமார்த்தியமாக பதுங்கி அதாவது மாட்டின் கண்களுக்கு உடனே தெரியாத வண்ணம் பின்னால் இருந்து பதுங்கி நிற்க வேண்டும்.. வெளியேறும் மாடு தவ்வி ஓடினால்..முதல் தவ்வில் அதைத் தொடக்கூடாது.. இரண்டாவது மூன்றாவது தாவலில் அதன் தவ்வலின் உயரம் குறையும்.. அப்பொழுது அதன் கூடவே ஓடி,மிக முக்கியமாய் வலதுபக்கம் மட்டுமே.. ஓடி அது எங்கே தாவுகிறதோ அதனோடு தாவி சிமிழைப் பிடித்துக் கொண்டு அதன் உடம்போடு லாவகமாக பத்தடி வரை செல்லவேண்டும்.. மேலே பிடிக்கப்படும் தூரத்தை கயிறு கட்டி தெரிவித்திருப்பார்கள்.. அதுவரை பிடித்தாலே போதும்..இது சாதாரண வழி..






சில மாடுகள் நின்று விளையாடும்.. தெளிவான மாடுபிடிகள் இந்த காளைகளை அதிகம் பிடிக்க மாட்டார்கள்.. ஏனெனில் அதன் கொம்புகள் மிகக் கூர்மையாக செதுக்கப்பட்டிருக்கும்.. சில மாடுகள் தகரக்கொம்புகளோடு கூட வரும். நின்று விளையாடுவது என்றால் ஓடாமல் அந்த இடத்தில் நின்று சுற்றி கொண்டிருக்கும்..வலதுபக்கம் போவதுபோல் சென்று இடது பக்கம் நிற்கும் கூட்டத்தை முட்டித்தூக்கும்..

இது போன்ற தருணங்களில் மிக எளிதாக தப்பிக்கும் முறை.. சிம்ப்பிள்.. படுத்துவிடுவார்கள்.. "ஒருசாய்த்து" படுத்துவிட்டால் ஒன்றும் செய்யாது.. ஓடினால் அடுத்தநாள் உட்காரமுடியாது.. ஆம் அந்த இடத்தை கிழித்துவிடும்.

மிரளும் மாடுகளின் பாடுதான் திண்டாட்டம்.. கூட்டமாய் அதன்மீது ஏறி சட்னியாக்கிவிடுவார்கள்.. ஆனால் மாட்டுக்காரர்கள் இதைப்பார்த்துக்கொண்டே மாட்டின் பின்னால் ஓடுவது போல ஓடி கையில் இருக்கும் கயிறைக்கொண்டு கூட்டத்தின் மேல் ஒரு இழுப்பு இழுத்து விட்டு போய்விடுவார்கள்.. காயம் ஆற அடுத்த ஜல்லிக்கட்டு ஆகிவிடும்.

இன்னும் சில மாடுகள் ஓடுவது போல் ஓடி நின்று திரும்பி குத்தித் தூக்கும்.. இதுதான் ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை மிக டேஞ்சரான தருணம்.. இதில்தான் உயிர்ச்சேதங்கள் ஏற்படுகிறது.. சிமிழிலும் வெளக்கெண்ணெய் தடவி இருப்பார்கள்.. அதுதவிர மாட்டின் உடல் முழுதும் கத்தாழை மற்றும் இன்னபிற வழுக்கும் ஐட்டங்களைத் தேய்த்திருப்பார்கள்.. பிடிக்கும்பொழுது வழுக்கி விழுந்தால் மிகத் தெளிவாக அப்படியே குப்புற படுத்துவிடுவார்கள்.. திரும்பினாலோ எழுந்து ஓடினாலோ தான் ஆபத்து..

இவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த அக்கப்போறு தேவைதானா.. என்ன பரிசு கிடைக்கும் என்கிறீர்களா?? பரிசுகள் என்னவோ குடம்,குத்துவிளக்கு,பீரோ,அதிகபட்சமாக டிவி.. ஆனால் அக்கம்பக்க ஊர்களில் எல்லாம் பேசுவார்களே .. "அந்த திருச்சி காளையை சிமிழ்லயே நிண்ட பய இவருதான்.." என்ற வார்த்தைகள்..அதற்காகத்தான் இவ்வளவும்..

அந்த ஒரு நாளைத்தவிர வருடம் பூராவும் மாடுகளுக்கும் மிகப்போஷாக்கான வாழ்க்கைதான்..

இந்ந்ந்ந்திய தொலைக்காட்சிகளில் முதன் முறையாக... என்று எந்த திரைப்படம் டிவியில் போட்டாலும்...

"காளை தவ்வுது.. முடிஞ்சா அணைஞ்சுக்கோவ்வ்வ்வ்வ்" என்று மைக்கில் கமிட்டியாளர்களின் குரலைக் கேட்டால்.. டிவியை அணைத்துவிட்டு அங்கே போய்விடுவார்கள்..

வாழ்க ஏறுதழுவல்.!

No comments: