அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

தலைமுடியும்..சில முடிவுகளும்

தலைமுடியும்..சில முடிவுகளும்

தமிழ் படத்தை ஆங்கில சப் டைட்டிலுடன் பார்த்தால், வசனத்தையும் அந்த சப்டைட்டிலையும் கலந்துபார்த்த, ஒருவித குழப்பமும் அல்லாத தெளிவும் அல்லாத மனநிலை ஏற்படுமே, அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருந்தான் பாண்டி.ஒருவேளை இருபது வயதே நிறைந்த பெண் தன் காதலனுடன் ஓடுவதற்காக மிக நேர்த்தியாக ஒரு கொலை செய்தாளே.. அதை நினைத்தா.. சத்யம் என்ற பெயர் வைத்து அந்த பெயருக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத காரியத்தை செய்தாரே அவரை நினைத்தா..ஹூஹும்.. இது வேலைக்காகாது என்று எழுந்தவன் அனிச்சையாக சட்டையை ஒரு கையில் மட்டும் மாட்டிக்கொண்டு கண்ணாடி முன் நின்றான்.சுவரில் சாய்ந்து அமர்ந்து இருந்ததாலும், படுத்துக்கொண்டே இருந்ததாலும் பின் மண்டை முடி படிய மறுத்தது.முடி வெட்டியும் ஒரு மாதம் ஆகிவிட்டது நினைவுக்கு வந்தததும் பட்டனைப் போட்டவாரே வண்டியை கிளப்பினான்.

சென்னை தி.நகரின் மையத்தில் இருந்த அந்த சலூன் உட்புறம் குளிரூட்டப்பட்டிருந்த உயர்தர ஃபைவ்ஸ்டார் ஹோட்டல் மாதிரி இருந்தது.காத்திருக்கும் இருக்கையில் அமர்ந்தவன் கையில் புத்தகத்தை எடுத்தான்.. ஏனோ ஊரில் சலூனுக்குபோன பழைய‌ ஞாபகங்கள் வந்தன..

சந்திரா சலூன்.. என்ற எழுத்துக்களுக்கே ஷேவிங் செய்தது போல அங்கங்கே வழித்து இருக்கும் போர்டு.. வாடிய பூ.

"வாங்க தம்பி.. எப்பவும் போலவா?? "
"இல்லண்ணே.. (F)பங்க் விட்டு கட் பண்ணுங்க.."
"பண்ணிருவோம்.." என்று கூறிக்கொண்டே.. விஷ்க் விஷ்க் என அந்த அரதப்பலசான தண்ணீர் பீய்ச்சும் கேனை எடுத்து முடியை நனைப்பார்..

"கோரமுடி தம்பி.. ஃபங்க் வச்சா நல்லா இருக்கும்" என்று கூறிக்கொண்டே கிரீச் கிரீச் என்ற ஒலி எழுப்பும் கத்திரிக்கோலை எடுப்பார்.. சீப்பில் லாவகமா ஒரு தட்டி தட்டி வேலையை ஆரம்பிப்பார்.. நடுநடுவே அரசியல் நாட்டின் பொருளாதாரம் அவரின் பொருளாதாரம் என அலசி ஒரு வழியாக முடித்து விட்டு, முடி படாமல் இருக்க போர்த்தி இருக்கும் துண்டை மெதுவாக எடுத்து கீழே லாவகமாக கொட்டி, மடிப்பார்.. அதை உதறவே மாட்டார்.. உதறினால் கிழிந்து விடும் என்று அவருக்கு தெரியும்.

மறுபடியும் விஷ்க் விஷ்க்.. படிய வாரி விட்டு.. (அவர் வாரிவிடும்பொழுது மட்டும் மிக நன்றாக படியும்) ஒரு மார்கெட்டிங்க் பிட்டைப் போடுவார்..

"என்னா ஃபங்க் வச்சு வெட்டினாலும் ஹீட்டர் போட்டாத்தான் "கிச்சுனு" நிக்கும்.."
ஹீட்டர் என்ற வார்த்தையைக் கேட்டதும் ஒருவித பரவச உணர்ச்சி ஏற்படும்..

கையிருப்பை கருத்தில் கொண்டு சரி என்று ஆசையாக அதையும் போட்டுக் கொண்டு வீடு வரை நடக்கும் பொழுது.. தேவர்மகன் கமல் செய்வது போல ஒரு 20 தடவையாவது கையை வைத்து பின்மயிரை கோதிவிட்டு.. வீட்டிற்குள் அடி எடுத்..

"நில்றா.. என்னடா இது?"
"என்னப்பா?"
"என்ன நொன்னப்பா? முடி வெட்டப்போறேன்னு சொல்லிட்டு அப்படியே இருக்கு?"
"ஃபங்..க்.."
"என்னா..து?"
"ஃபங்க் ஸ்டைல்ப்பா.."
"என்ன எழவோ.. இரு.." என்று சட்டையை மாட்டிக்கொண்டு
"வாடா.. சந்திரா தான?"
எனும்போதே,அவமானம் ஆரம்பித்து விடும்..

"ஏன்யா.. அவந்தான் சின்னப்பையன்னா.. உனக்கு தெரியாதா? என்ன வெட்டியிருக்க?"

"தம்பி ஆசப்பட்டுச்சு சார்.."

"ஆசயாவது பூசயாவது.. எப்பவும் போல வெட்டுங்க.."

அந்த "எப்பவும்" போல என்பது.. காதுக்கும் முடிக்கும் இருக்கும் இடைவெளியில் ரயில் விடலாம் போல ஒரு வெட்டு.. காது மட்டும் பெரிசாக தனியே தெரியும்.. உச்சி மண்டையில் கபாளம் தெரியும் படி கரைத்து விடப்படும்..

"கரச்சான் மண்ட.. எந்த பாலத்துக்கீழ தலய குடுத்த" போன்ற வார்த்தைகளுக்கு பயந்து மறுநாள் பொய் சொல்லி ஸ்கூலுக்கு போவது பெரும்பாலும் தவிர்த்துவிடுவான்.

"சார்.. வர்றீங்களா.." என மிக பவ்யமான அழைப்பில் நிகழ்வுக்கு வந்தவன்.. கண்ணாடி முன் இருந்த குஷனில் அமர்ந்தான்..

"என்ன சார்.. லைட்டா ட்ரிம் பண்ணிருவமா? லேட்டஸ்ட் ஃபேஷன் ஸ்டைட்ரனிங்.. முடி நீளமா இருக்குறதால உங்களுக்கு நல்லா செட் ஆகும்.."

"வேண்டாம்..நல்லா ஒட்ட வெட்டுங்க.."

என்று கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான்..வானத்தில் இருக்கும் அப்பாவை மூடிய கண்களில் பார்த்துக்கொண்டே..

No comments: