அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, January 21, 2009

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..

ஜெயமோகனின் ஊமைச்செந்நாய்..

சில எழுத்தாளர்களின் நடை வசீகரமாக இருக்கும். சிலரின் கதை சுவாரஸ்யமாய் போகும்.. சில எழுத்தாளர்களின் வர்ணனைகள் அந்த சூழலுக்குள் வாசகனை இட்டுச் செல்லும்.. வெகு சில எழுத்தாளர்களின் எழுத்தில் இவை அனைத்தும் இருக்கும்.. அதில் ஜெயமோகனும் ஒருவர். ஒரு சோறு பதம்..ஊமைச்செந்நாய்...

ஒன்லைன் ஸ்டோரி என்று பார்த்தால்..ஒரு வெள்ளைக்கார துரையின் வேட்டையாடலுக்கு உதவும் அடிமையின் கோணம்.

அந்த துரை, நாம் லகான் படத்தில் அமீர்கானுடன் மோதும் வெள்ளைக்கார துரையின் பிம்பம் ஏற்படும்..சாதாரணமாக துரை என்றவுடன் பரங்கித்தலை,ஈஸ்ட்மெண்ட் கலர் பவுடருடன் வீரபாண்டியகட்டபொம்மன் படத்தில் வரும் துரைகள் தானே நமக்கு ஞாபக வரும்.. ஆனால் அப்படி ஏற்படவில்லை..முதல் பாராவிலேயே துரை என்று ஆரம்பிக்கும் ஜெயமோகனின் வர்ணனையின் வலிமை அப்படி.

அந்த துரைக்கு(வில்சன்) கிட்டத்தட்ட அடிமையாக இருக்கும் ஒருவனின் பார்வையில் துரை நடத்தும் கொடுமைகள்,அவன் உணவு பழக்கம்,பெண்களை புணரும் விதம் என அனைத்தையும் ஊமைச் சாட்சி போல் பக்கத்தில் இருந்து பார்த்து சொல்லும் கோணமே ஊமைச்செந்நாய்..ஊமைச்செந்நாய் அந்த அடிமைதான்.

தோமா என்ற சமையல்காரனின் ருசியான இறைச்சிகளை துரை உண்ணும் விதம்..அவன் உண்ணும் வரை காத்திருந்து பின் கிடைக்கும் மீந்த உணவை ருசித்து உண்ணுவதாகட்டும்.. துரையின் பசி அடங்கியபின் காமப்பசிக்கு அங்குள்ள வேசிப்பெண்ணை அழைத்து வந்து..அவள் படும் வேதனையை பார்த்து தலைகுனிவதாகட்டும்..பின் காதலுடன் அவள் இவனை அழைக்கும் பொழுது உடலுறவு கொண்டு..

இந்த இடத்தில்தான் ஜெயமோகனின் எழுத்தின் வலிமை.. பின்னர் வரும் அத்தியாயத்தில் இந்த செந்நாய் பாத்திரம் துரைக்காக ஒரு மானை ஈட்டி எறிந்து வீழ்த்தி..அது துடித்து இறக்கும் பொழுது பாவமாய் கண்களை மூடும் பொழுது..அவனின் மனது அவளைப் புணரும் பொழுது அவள் கண்கள் சொருகி உச்சம் அடைந்ததை நினைத்துப் பார்ப்பது போல வரும் இடம்.. நிறைய அர்த்தங்களில் வாசிக்கப்பட வேண்டியது.

துரையின் துப்பாக்கி.. அதையும் ஒரு பெண்ணைப்போல கையாளும் அவன் குணம்..யானைகளையும் இந்திய தெய்வங்களையும் துச்சமாக மதிக்கும் ஆங்கிலேய மன்ப்பான்மை..அதற்கு அவன் சொல்லும் காரணம்..அதாவது அவர்கள் நாட்டில் செல்வந்தர்களால் பட்ட அவமானங்களை இங்கே வெய்யிலையும் பொருட்படுத்தாது வந்து அந்த அவமானங்களை இந்திய அடிமைகள் மீது காட்டி சந்தோஷப்படும் சாடிஸ மனப்பான்மை.. என சுழட்டி அடிக்கிறார் ஜெமோ.

காட்டின் நுட்பமான விபரங்கள்..செடிகள்..என நிறைய விபரங்கள்.. ஒரு ஸாம்பிள்.. இரை தேட சிறுத்தை நடக்கும் பொழுது மண்கூட சரியாது..புல்கூட அசையாது..
இது போன்ற நுட்பங்கள்..

ஒரு யானையை சுட்டு வீழ்த்தி..அதன் தந்தங்களை பார்த்த்து தடவும் துரை..அதே நேரம் அந்த யானையின் கண்களில் வழியும் நீரை பாவமாய் பார்க்கும் செந்நாய் பாத்திரம்.. இப்படி பாத்திர வேறுபாடுகளை குறிப்பால் உணர்த்தும் பாங்கு..

எவ்வளவு கொடுமைகள் செய்திருப்பினும் அந்த துரையை பாம்பு கடித்தவுடன் மிகுந்த அக்கறையுடன் காப்பாற்றும் செந்நாய்..

ஆனால் அவன் துரையை முடிவில் என்ன செய்கிறான்? என்பது ஆச்சர்யம்.. படியுங்கள்..

ஜெயம் மோகன்..

(இது தொடர் பதிவு இல்லை என்றாலும் புத்தககண்காட்சியில் வாங்கிய/வாசித்த விமர்சனத்தையோ அறிமுகத்தையோ பதிவர்கள் தொடர்ந்தால் நல்ல புத்தகங்கள் அறியும் வாய்ப்பு கிடைக்கும்..)

No comments: