அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 2, 2009

நிறம் மாற்றப்படும் வரலாறுகள்! (பகுதி 2)


பொய்களை 'உண்மை' ஆக்கிய கோயபல்ஸ்!- கடந்த கால நிகழ்வுகளின் - அனுபவங்களின் தொகுப்பு தான் வரலாறு..!

- இலக்கியங்கள் 'காலத்தின் கண்ணாடி' என்று போற்றப்படுகின்றன. வரலாறுகளும் அப்படித்தான்!

- வரலாறு ஓர் அதிசயக் கண்ணாடி. நம்முடைய முகம் நேற்று எப்படி இருந்தது என்பதை இன்றைக்குக் காட்டும் அற்புதக் கருவி அது!

...'முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்' நூலின் பதிப்புரையில் எச். அப்துர் ரகீப்

சார்பின்மையுடன் பதியப்பட வேண்டிய வரலாற்றின் பக்கங்களை சிலர் கயமைத்தனமாக திரித்து வைத்திருக்கின்றனர் என்பதும் கவலைக்குரியதொரு வரலாற்று உண்மைதான்!


ஜனநாயக விரோத சக்திகள் மக்களிடையே தமது செல்வாக்கை வளர்த்துக் கொள்ளும் நோக்கிலும், தமக்கு மாற்றமான கொள்கை உடையவர்களின் புகழையும் செல்வாக்கையும் குலைக்கும் விதத்திலும் பொய்ப் பிரச்சாரங்களை (Propaganda) அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் என்பது அந்த வரலாற்றின் பக்கங்களிலிருந்தே நமக்குப் புலப்படும்.


"காலனி ஆதிக்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்பதைத் தவிர ஆர்.எஸ்.எஸ்.க்கு இந்திய சுதந்திரப் போராட்டத்தில் எத்தகையப் பங்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். ஆனாலும், சங் பரிவாரங்கள் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றது ஒரு தேசிய மதிப்பைப் பெற்றுத்தர மிகவும் தேவைப் படுவதால் அதை ஒரு சொத்தாக பயன்படுத்திக் கொள்ள மிகவும் கவனமாக உள்ளன.


"எனவே, காலனி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆக்கபூர்வமான பாத்திரத்தை வகித்ததாக சுதந்திரப் போராட்ட வரலாறு திரித்து எழுதப்படுகிறது. இது அவர்களது தலைவர்களை சுதந்திரப் போராட்ட வீரர்களாகச் சித்தரிக்கவும், மறுபுறத்தில் அவர்களது உண்மையான தோற்றத்தை மறைத்துக் கொள்ளவும் தேவைப்படுகிறது."
- பேராசிரியர் பணிக்கர்.

இது போல, இருட்டான தங்கள் கடந்த கால வரலாற்றை தங்கள் நிகழ்கால, எதிர்கால திட்டங்களுக்கு சாதகமாக இருக்கும்படி பாசிஸ சக்திகள் திருத்தி எழுதுவதுதான் வரலாற்றுத் திரிப்பு. காலகாலமாகவே இது நடந்து வந்திருக்கிறது.


ஜெர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றவர் ஜோசப் கோயபல்ஸ். ஹிட்லரின் பிரச்சாரத்துறை அமைச்சராக இருந்த இவர், 'ஒரு பொய்யை திரும்பத் திரும்பச் சொல்லி 'உண்மை'யாக்குபவர்' என பிரசித்திப் பெற்றவர். இவரது உத்தரவின்படி ஜெர்மனியில் ஊடகங்கள் அனைத்துமே கடுமையான தணிக்கைக்கு உள்ளாக்கப் பட்டன. பிரச்சாரத்துறை அனுமதித்த செய்திகளை மட்டுமே நாளிதழ்கள் வெளியிட முடியும். அரசிற்கு எதிரான கொள்கையுடையவர்கள் மற்றும் யூதர்கள் எழுதிய புத்தகங்கள் நூலகங்களிலிருந்தும் கடைகளிலிருந்தும் நீக்கப்பட்டுத் தெருவில் போட்டு எரிக்கப்பட்டன.

கோயபல்ஸின் பிரச்சார வலையிலிருந்து பள்ளிச் சிறுவர்களும் தப்பவில்லை. பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டிய பாடங்களை நாஜிகள்தான் முடிவு செய்தனர். நாஜி கொள்கைகளை பள்ளிகளில் போதிப்பதற்கு ஆசிரியர்களுக்கு கட்டாயப் பயிற்சி அளிக்கப் பட்டது. பாடங்களில் யூதர்களும் கம்யூனிஸவாதிகளும் மிக மோசமானவர்களாக சித்தரிக்கப் பட்டிருந்தனர். மனித குலத்தினில் இரு வகை இருப்பதாகவும், அதில் ஜெர்மனியர்களின் ஆரிய இனம் உயர்ந்த குலம் என்றும் ஆரியரல்லாத மற்றவர்கள் தாழ்ந்த குலம் என்றும் மாணவர்கள் போதிக்கப் பட்டனர். தாழ்ந்த குலத்தினரெல்லாம் உயர்ந்த குலத்தினரின் அடிமைகளாக இருப்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் என்றும் போதிக்கப் பட்டது.

வரலாற்றைத் திரிப்பு மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் புரிவோருக்கு சுலபமான இலக்கு பள்ளிச் சிறுவர்கள் தான்; பள்ளிச்சிறார்கள் மிகப் பயனளிக்கும் இலக்கும் கூட. குழந்தைகளுக்கு வரலாற்றுடன் அறிமுகம் ஏற்படுவது பெரும்பாலும் பள்ளிப் பாடங்கள் மூலமாகத்தான். பள்ளிகளில் போதிக்கப்படும் பாடங்களை குழந்தைகள் அப்படியே நம்பி விடுவர். அது பொய்யாக இருக்குமோ என்ற சிந்தனை கூட தோன்றாத பருவம் அது. சிறார்களின் கள்ளங்கபடமற்ற மனதில் நஞ்சைத் தடவுவதைப்போல பொய்யான கருத்துக்களை விதைக்கின்றனர் வரலாற்றுத் திரிப்புவாதிகள்.

வரலாற்றுத் திரிப்பு என்பது பெரும்பாலும் இரண்டு வகையாகச் செய்யப் படுகிறது;

1. உண்மையான நிகழ்வு ஒன்றை மறைப்பது, அல்லது அதனை எதிர்மறையாக மாற்றிப் பதிவது. உதாரணமாக, இந்து ராணி ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்குப் பரிகாரம் செய்த ஔரங்கசீப் மீது 'கோவிலை இடித்தார்' என்று பழி சுமத்தப்படுவதைக் குறிப்பிடலாம்.

2. நடக்காத ஒன்றை நடந்ததாகப் பதிவது. உதாரணமாக, திப்புசுல்தான் முஸ்லிமாக மாறச் சொல்லி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற கட்டுக்கதையைச் சொல்லலாம்.

இந்திய வரலாற்றில் இது போன்ற கட்டுக்கதைகளைச் 'செருகிய' பெருமை ஆங்கிலேயர்களையே சாரும். கோயபல்ஸின் காலத்திற்கு நூறாண்டுகள் முன்பாகவே ஆங்கிலேயர்கள் இத்'திருப்பணி'யைத் தொடங்கி விட்டனர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்....

ஆக்கம்: இப்னு பஷீர்

No comments: