அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

எங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்: முஸ்லிம்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலமாக்கள்- உமராக்கள்' மாநாட்டில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலர் கே.எம்.காதர்மொகிதீன். உடன் சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃப் துறை அமைச்சர் டி.பி.எம்.மைதீன் கான்.


சென்னை, பிப். 1 : முஸ்லிம்களுக்காக திமுக அரசு செய்த சாதனைகளை எல்லாம் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் "இந்திய யூனியன் முஸ்லிம் லீக்' மற்றும் "மஹல்லா ஜமாஅத்' அமைப்புகளின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலமாக்கள் -உமராக்கள்' மாநாட்டில் அவர் பேசியதாவது:

முஸ்லிம்கள் கேட்காததை எல்லாம் திமுக அரசு செய்துள்ளது. அதனை முஸ்லிம்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

உலமாக்கள் மாநாட்டில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த தீர்மானங்களை முதல்வர் கருணாநிதியிடம் கொடுத்து அதனை முடிந்த அளவுக்கு நிறைவேற்றவும் துணை நிற்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

ஜெயலலிதா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக அரசை "மைனாரிட்டி அரசு' என்று விமர்சனம் செய்கிறார்கள். திமுக அரசு சிறுபான்மை மக்களுக்காக பாடுபடுவதால் சிறுபான்மை அரசு என்கிறார்கள். அதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்றார் ஸ்டாலின்.

மாநாட்டில் சுமார் 3 ஆயிரம் உலமாக்கள் (முஸ்லிம் மதகுருக்கள்) பங்கேற்றனர். மாநாட்டில் பேசிய பலரும் தற்போது எம்.பி.யாக உள்ள கே.எம். காதர்மொகிதீனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கி அவரை மத்தியில் காபினட் அமைச்சராக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தனர்.

தீர்மானங்கள்...: மத்தியில் உள்ளது போல தமிழகத்திலும் சிறுபான்மை நலத்துறைக்கு தனி அமைச்சரகம் அமைக்க வேண்டும், உலமா நலவாரியம் அமைக்க வேண்டும், உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும், புதிய பள்ளிவாசல்கள் கட்ட அனுமதி வழங்க வேண்டும், முஸ்லிம்களின் அடக்கத்தலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸôக்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதரஸô மாணவர்களுக்கு இலவச உணவுப் பொருள்கள் வழங்க வேண்டும், மதரஸô படிப்பு சான்றிதழ்களை அங்கீகரிக்க வேண்டும், மாவட்டங்களில் காலியாக உள்ள அரசு காஜி பணியிடங்களை நிரப்ப வேண்டும், முஸ்லிம்களுக்கு இலவச வீட்டு மனைகள் வழங்க வேண்டும், உருது பள்ளிகளுக்கு உதவ வேண்டும், தர்கா மற்றும் ஜியாரத் வழிமுறையில் நம்பிக்கையும், சுன்னத் வல் ஜமாதஅத் கொள்கையில் நம்பிக்கையும் உள்ளவரை மட்டுமே தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவராக நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். காதர்மொகிதீன், சுற்றுச்சூழல் மற்றும் வக்ஃப் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

No comments: