அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

மவ்லூது ஓதும் இமாமை பின்பற்றி தொழலாமா?

கேள்வி: மவ்லூது ஓதும் இமாமை பின்பற்றி தொழலாமா? எங்கள் பகுதியில் தவ்ஹீதுவாதிகள் இரண்டு விதமான கருத்தில் உள்ளனர். ஒரு சாரார் 'மவ்லூது ஓதக்கூடியவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்: எனவே அவரை பின்பற்றி தொழுவது கூடாது' என்கின்றனர். மற்றொரு சாரார் 'தொழும் நிலையில் அவர் இணை வைக்கவில்லை: ஆகையால் அவரை பின்பற்றி தொழலாம்' என்கின்றனர். இதில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும். அது எது என்பதை விளக்கவும்.

பதில்: நீங்கள் குறிப்பிட்டது போன்று இரண்டு கருத்தில் ஒன்றுதான் சரியாக இருக்க முடியும். இரண்டு கருத்துமே சரியானது தான் என்று கூற முடியாது.

ஷிர்க் என்றால் என்ன? அதன் விளைவு எவ்வளவு கொடியது என்பதை சரியாக புரியாதவர்கள் தான் ஷிர்க்கையும் மற்ற சாதாரண பாவங்கள் போல கருதி, அதை செய்யக்கூடியவர்களின் பின்னால் தொழுவது குற்றமில்லை என்ற தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர். ஒரு மனிதனை இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றக் கூடியது எது? என்பதை இவர்கள் சரியாக புரியவில்லை! முஸ்லிமானவன் ஷிர்க்கான காரியத்தை செய்வதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகிறான். அந்த பாவத்திற்காக வருந்தி, அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரி திரும்பவும் அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்று உறுதி கூறினால் தான் மீண்டும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வந்தவனாக கருதப்படுவான். இது தான் அடிப்படை. இந்த அடிப்படையை சரியாக புரிந்து விட்டால் இந்த கேள்விக்கு எளிதில் விடை கிடைத்துவிடும்.

மவ்லூது பாடல்களில் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை தெளிவாக உணர்த்திய பின்பும் பிடிவாதமாக அதை செய்து வருவதை பார்க்கிறோம். இதன் மூலம் அவர்கள் இதை அறியாமையினால் செய்யவில்லை: மாறாக அறிந்தே செய்கிறார்கள் என்பது உறுதிப்படுகிறது.

நாகூர் ஆண்டவரே! என்னை காப்பாற்றும் எனக்கு நீண்ட ஆயுளைத் தாரும் என்றும் காப்பாற்றி கரை சேர்க்கும் கவ்து முஹ்யித்தீனே! என் கை பிடித்து காப்பாற்றும்! நீர் தான் இரட்சிப்பவர் என்றும் கூறுபவர்கள், பாடுபவர்கள், அவர் வந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் பாடுகிறார்கள். இப்படி நம்பிக்கைக் கொண்டு அல்லாஹ்வை தொழக்கூடியவரின் தொழுகை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

மவ்லூது ஓதும் போது மட்டுமே அவர் ஷிர்க் செய்கிறார். தொழும் நேரத்தில் ஷிர்க் செய்யவில்லையே என்ற கேள்வியே தவறானது என்பதை புரிய வேண்டும்.

மேலும் மவ்லூதில் உள்ள ஷிர்க்கான கொள்கைகளையெல்லாம் அதை ஓதுகின்ற நேரத்தில் மட்டும் அவை சரியான கொள்கை என அவர் நம்பி விட்டு, தொழும்போது அவற்றை தவறானவை என்றா நம்புகிறார்? அப்படியானால் அவர் இரு கொள்கையுடைய முனாஃபிக் (நயவஞ்சகர்களின்) பட்டியலில் இடம் பெற்று விடுகிறார். இப்படிப் பட்டவர்கள் மிகவும் ஆபர்தானவர்கள் என்பதை அவதானிக்க வேண்டும்.

திருடியவனின் கையை வெட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது (5:38) கையை வெட்டப் போகும் போது அவன் திருடவில்லை, முன்னரே திருடிவிட்டான். அந்த பிரிவினரின் கூற்றுப்படி பார்த்தால் கையை வெட்டக் கூடாதே! விபச்சாரம் செய்வோரை கசையடி அடிக்க வேண்டும், கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். ஆனால், தண்டனை கொடுக்கப் போகும் போது அவன் அந்த தவறை செய்யவில்லையே! அவர்களின் சொற்படி தண்டனை கொடுக்க முடியாதே!

ஒருவர் தொழும்போது மட்டும் ஷிர்க்கான செயலை செய்யாமல் இருந்தால் போதும் அவரை பின்பற்றி தொழலாம் என்று கூறுவது பெரிய தவறாகும். இறைவனுக்கு இணை வைத்தல் என்பது செயலாலும் ஏற்படும், நம்பிக்கையினாலும் ஏற்படும். அல்லாஹ்வுக்கென்று தனித்துவமான சில பண்புகள் மனிதர்களுக்கும் உண்டு என நம்புவது இறைவனுக்கு இணை வைத்தலாகும். இந்த நம்பிக்கை இதயத்துடன் தொடர்புடையது. இது எல்லா நேரத்திலும் இதயத்தில் இருக்கவே செய்யும். எனவே இப்படிப்பட்ட நம்பிக்கையை இதயத்தில் வைத்திருப்பவர் பின்னால் தொழுவது கூடாது என்பது மிக மிகத் தெளிவு.

No comments: