அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

உலகப் பொருளாதார நெருக்கடி அன்றும்-இன்றும்

1929ல் ஏற்பட்ட பங்குச் சந்தை சரிவால் ஏற்பட்ட நெருக்கடிக்கும், 2008ல் உருவாகி வரும் பொருளாதார சரிவிற்கும் ஒப்பிட முடியாத வேறுபாடுகள் உண்டு. 1929-2008 நெருக்கடிகள் இரண்டும் பிறந்த இடம் அமெரிக்கா என்பதைத் தவிர வேறு ஒற்றுமை கிடையாது.

1929ல் ஏற்பட்ட நெருக்கடி என்பது வானத்திலிருந்து விழுந்த இடி எனலாம், 2008ல் ஏற்பட்ட சரிவு என்பது பூமி குலுங்கி கடல் சுருண்டு திரண்டு கரைகளை அடித்த சுனாமி போன்றது. அன்று சர்வதேச வர்த்தகத்திற்கு தங்கம் மட்டுமே செல்லுபடியாகும் பொது நாணயமாக இருந்தது. இன்று நிலைமை வேறு. வர்த்தக நெருக்கடிக்கு காரணமான தங்க செலாவணி முறையை ஓரம்கட்டிவிட்டு, 1945ல் ஏற்பட்ட பிரெட்டன் வுட் ஒப்பந்தத்தின் மூலம் டாலர் தாள் முதலில் புகுந்தது. இன்று ஏகாதிபத்திய நாடுகளின் தாள் நாணயங்கள் (டாலர், பவுண்டு, ஈரோ, யென்) சர்வதேச செலாவணிகளாக உள்ளன. பங்குச் சந்தை மூலம் மூலதன திரட்டல், நிதி நிறுவனங்கள், ஹெட்ஜ் பன்டுகள் என்பன இன்று போல் அன்று உலக அளவில் படரவில்லை. அதைவிட இன்று போல் நிதி மூலதனம் பல தலைகளை கொண்டதாக ஆகவில்லை.
கடன் பத்திரம், சரக்கு பத்திரம், சர்வதேச அந்தஸ்து பெற்ற நாணயங்களை விற்கும் நாணயச் சந்தையென 10 தலை ராவணனாகவில்லை. இன்று போல் அன்று எல்லா நாடுகளின் பொருள் உற்பத்திகளும் சர்வதேச வர்த்தகத்தோடு இணைக்கப்படவில்லை. இன்று போல் அன்று தொழில்நுட்பங்களும், திறன்மிக்க உழைப்பாளர்களும் லட்சக்கணக்கில் நாடுவிட்டு நாடு தாண்டி உழைக்கப் போகவில்லை. இன்று சர்வதேச வர்த்தகத்தை நம்பிக்கையோடு நடத்த பல சவால்களை வர்த்தகர்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது. ஆயிரக்கணக்கான கப்பல்கள் சரக்குகளை ஏற்றி கடல்களை தாண்டி பாதுகாப்பாக இலக்கை அடைவதற்கு இடையில் ஏற்படும் சிக்கல்கள் தவிர, விற்பவரும் வாங்குபவரும் நேர்மையாக நடந்து கொள்ள உத்தரவாதம் தேவைப்படுகிறது. இதன் விளைவாக வர்த்தக முதலீடு,முன்பணம் என்ற வகைகளில் நிதி மூலதனமும், அதனை காக்க இன்சூரன்சும் நவீன பொருள் உற்பத்தியில் முதன்மை இடத்தை பிடித்து விட்டது. (முதலாளித்துவ உற்பத்தி முறையில் இதுவே நிதி மூலதன ஆதிக்கமாகி சுரண்டலின் குவிமையமாகிவிட்டது).
இன்றைய நிலை
நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு இல்லாமல் உலக வர்த்தகம் சுழலாது. உலக வர்த்தகம் சுழலாமல் பொருள் உற்பத்தி சக்கரம் சுழலாது. எல்லா நாடுகளும் பயனடைகிற முறையில் சர்வதேச வர்த்தக ஒப்பந்தத்தில் சமத்துவமும் சரியான பணக் கருவியும் இல்லாத நிலையே நெருக்கடியை இன்று கொண்டு வந்துள்ளது. இந்தப் பிரச்சனை பற்றி பொருளாதார நிபுணர்கள் கூறுவதென்ன?
2008 மார்ச் மாதத்தில் கியூபாவில் கூடிய 10 வது உலகப்பொருளாதார நிபுணர்கள் மாநாட்டில் 55 நாடுகளிலிருந்து 1300க்கும் மேற்பட்ட பொருளாதார நிபுணர்கள் பங்கேற்றனர். அங்கு வெளிவந்த மாறுபட்ட கருத்துக்கள் நம்மை சிந்திக்க வைக்கின்றன. இதில் பங்கு கொண்ட பிரபலமான நிபுணர் ளில் ஒருவர் கனடா நாட்டு ராபர்ட் முன்டல் 1999ம் ஆண்டு பொருளாதாரதுறைக்காக நோபிள் பரிசு பெற்றவர், செல்வாக்கு மிக்கவர், ரீகனுடன் இணைந்து செயல்பட்டவர், ஈரோ நாணய அமைப்பை உருவாக்கிட ஐரோப்பிய நாடுகளுக்கு திட்டம் வகுத்துக் கொடுத்தவர், இவர் விவாதத்தை தொடங்கிவைத்து பேசும் பொழுது “1945ல் டாலரை சர்வதேச செலாவணியில் மேலாண்மை பெற உருவான பிரெட் டன்வுட் ஒப்பந்தமே இன்றைய நெருக்கடிக்கு காரணமாகும்இன்று அமெரிக்காவை அலைக்கழிக்கும் நெருக்கடியை பெரிதுப்படுத்தி கூறுவதை நான் ஏற்கவில்லைடாலரின் மதிப்பு வீழ்ச்சியை அமெரிக்க பொருளாதாரம் ஜீரணித்து வெகு சீக்கிரம் வேகப்படும் என்று நம்புகிறேன்ஆனால் உலக நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக சிரமப்படும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்பணக்கார நாடுகளிடையே ஏற்பட்டிருக்கும் செலாவணி முரண்பாட்டை தவிர்க்க டாலர், பவுன்ட், ஈரோ, யென் ஆகிய நான்கையும் இணைத்துஇன்ட்டர் என்ற பொதுவான சர்வதேச செலாவணியை கொண்டு வரலாம் என்றார். சீனப் பொருளாதார வளர்ச்சியை அவர் பாராட்டியதோடு அவர்கள் பொதுத் துறையை அடிப்படையாக வைத்து சந்தையைக் கட்டினர். மற்ற நாடுகள் பொதுத்துறையை அழித்து சந்தையைக் கட்டின எனவே வேறுபட்ட விளைவுகள் என்றார். வாஷிங்டனில் இயங்கிவரும்பொருளாதார கோட்பாட்டு ஆய்வுமைய-இயக்குனர் மார்க் வெயிஸ் பிராட் பேசுகிற பொழுது. அமெரிக்க பொருளாதாரம் சரிந்து வருகிறது என்பதை உறுதி செய்தார். அதன் விளைவாக வேலைவாய்ப்புகள் சுருங்கி வேலையற்றோர் எண்ணிக்கை கூடி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாடுவோர் எண்ணிக்கை கூடுவதை சுட்டிக் காட்டினார். இந்த அமெரிக்க நெருக்கடியினால் அமெரிக்காவைவிட அதிகம் பாதிப்பது அருகிலிருக்கும் கனடாவும் மெக்ஸிகோவும்தான். இந்த இரு நாடுகளும் அமெரிக்காவை வெகுவாக நம்பியிருக்கும் நாடுகள். அவர் பேசுகிறபொழுதுகடந்த 10 ஆண்டுகளாக தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் மக்கள் மாற்றுக் கொள்கையுடைய அரசுகளை தேர்வு செய்வதை காண்கிறோம்.
பொருளாதார வளர்ச்சி என்பது பூஜ்யத்தை தொட்டதால் இந்த மாற்றம் வந்தது. கடந்த 150 வருடங்களாக இல்லாத மாற்றங்களை அங்கு காண்கிறோம். வெனிசுலா என்ற நாடு பெட்ரோலிய நிறுவனங்களை தேச உடமையாக்கி அதன் வருவாயை கல்விக்கும் சுகாதாரத்திற்கும் திருப்பிவிட்டதோடு ஏழைகளுக்கு கடன் வசதியும் செய்தது. அங்கு வறுமை நீங்கிய தோடு பணவீக்கமும் குறைந்தது. வருங்காலங்களில் நவீன தாராளமயத்திலிருந்து நாடுகள் விலகும் போக்கு அதிகப்படும்.
அமெரிக்காவை நம்புவதால் பலன் எதுவுமில்லை என்ற முடிவிற்கு வரும் நாடுகளின் எண்ணிக்கை அதிகப்படும் என்றார். சிலி நாட்டு நிபுணர் ஆர்லாண்டோ காபுட்டோ, முதலாளித்துவ உற்பத்தி முறையின் அமைப்புக் கோளாறை ஆதாரத்தோடு சுட்டிக் காட்டினார். கடந்த 30 ஆண்டுகளில் நெருக்கடிகள் ஆறு முறை சுழன்றடித்ததை சுட்டிக் காட்டினார்இந்த நெருக்கடியையும் அவர்கள் சமாளிக்கலாம். ஆனால் பிரச்சனை மீண்டும் தலை தூக்கும்.
எனவே தீர்வு என்பது புரட்சிகரமானதாகஅமைவது அவசியம் என்றார். 2007ல் நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் எரிக்.எஸ். மாக்சின் இந்த உலகமயம் ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்தியிருப்பதை புள்ளி விபரத்தோடு நிரூபித்தார். அமெரிக்கநாட்டு உழைப்பிற்கு அதிக ஊதியமும், அதே திறன் உள்ள ஏழை நாட்டு உழைப்பிற்கு குறைந்த ஊதியமும் வழங்கப்படுகிறது. உருவாக்கப்படும் பொருள்களை, முடிவில் இருவருமே இறக்குமதி செய்கின்றனர். இது ஏற்றத்தாழ்விற்கு இட்டுச் செல்கிறது என்றார். மெக்சிகோ பேராசிரியர் ஆஸ்க்கார் யுகார்ட்சிக்கோ சிலி நாட்டு பேராசிரியர் ஆர்லாண்டோ காபுட்டோ, பெல்ஜிய நாட்டு பேராசிரியர் எரிக் டோசி யான்ட் (உலக வங்கியின் நிரந்தர படையெடுப்பு என்ற நூலின் ஆசிரியர், மூன்றாம் உலக கடன்களை ரத்துச் செய்ய இயக்கம் நடத்தும் குழுவின் தலைவர்) மூவரும் இன்றைய உலகமய வர்த்தக அமைப்பை மாற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.
உலக வர்த்தக உறவில் நெருக்கடிகளை கொணரும் அசமத்துவத்தை நீடிக்கச் செய்வதையே அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் தீர்வாக கருதுகின்றன என்பது நிபுணர்களின் கருத்து மோதல்கள் உணர்த்துகின்றன.
பிற நாடுகள் பல வழிகளில் உலக வர்த்தகத்தில் சமத்துவ உறவை நிலை நாட்டிட போராடுகின்றன என்பதும் தெரிகிறது. இவர்களுக்குள் சவாலை சந்திக்க பொது கருத்து உருவாகவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. எனவே பொதுக்கருத்தை உருவாக்கும் பணி அவசியமாகிறது. சில தென் அமெரிக்க நாடுகளின் மக்கள், அத்தகைய அரசியல் தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து சவாலை சந்திக்க இறங்கியுள்ளனர். நாமும் கற்போம்; சவாலை?

No comments: