அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

இருதலைக்கொள்ளி எறும்பாய் ஈழத்தமிழர்கள்...!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம் செய்வார்கள். அது தங்களை பலப்படுத்திக் கொள்ளவே தவிர மக்களின் துயர நிலையை கருத்தில் கொண்டல்ல. இது பல காலமும் நடந்தே வந்துள்ளது. இப்போது அவர்கள் போர் நிறுத்தம் என்று அறிவித்திருப்பதும் அவ்வாறான ஓர் உள்நோக்குடன்தான். அவர்களின் இந்த தந்திரத்தை அறிந்து கொண்டுதான் ராஜபக்சே போர்நிறுத்தம் செய்ய மறுக்கின்றார்.

இலங்கை பேரினவாத அரசும் சரி, புலிகளும் சரி மக்களை கொன்று குவிப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர்.

திலும் சிங்கள ராணுவம் கொன்று குவித்த தமிழர்களை விட புலிகள் கொன்ற தமிழர்கள்தான் அதிகம். ஈழத்தின் மாண்பார்ந்த தலைவர்களையெல்லாம் விண்ணுலகிற்கு அனுப்பிய பெருமை புலிகளையே சாரும். இவர்களின் பாசிச போக்கால்தான் மனம் வெறுத்து கருணா போன்ற தளபதிகள் கூட சிங்கள அரசின் பக்கம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. தோளோடு தோள் நின்று சிங்கள ராணுவத்தை எதிர்த்திருக்க வேண்டிய எத்தனையோ சக போராளிகளையும் கொன்று குவித்தவர்கள் புலிகள் (பத்மநாபா, சபாரத்தினம், உமா மகேஸ்வரன்).

புலிகளின் ரசிகர்களாக விளங்கும் நம் தமிழக தலைவர்களுக்கு அப்பாவி தமிழர்களின் மீது ஒரு இழவு பரிவும் கிடையாது. அங்கு புலிகள் அடிபட்டால் இங்கு இவர்களுக்கு வலிக்கும். 'அய்யய்யோ தமிழர்களை கொல்கிறார்களே' என்று கூப்பாடு போடுவார்கள். இப்போதும் இதுதான் நடக்கிறது. சில அரசியல்வாதிகளாலும் சில சினிமாக்காரர்களாலும் தான் இன்று ஈழப்பிரச்சனை முன்னெடுக்கப் படுகிறதே தவிர தமிழக மக்களுக்கு இதில் பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது.

வழக்கம் போல இதுபோன்ற பிரச்சனைக்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்து ஜாலி கொண்டாடும் நம் மாணவர்கள் கூட, இம்முறை அவ்வாறு வெளிவந்து போராட்டம் எதுவும் நடத்தவில்லை என்பதிலிருந்தே ஈழ விஷயமாக நமது மக்கள் எத்தகைய அசிரத்தையுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். மாறாக, சில ஊடகங்கள் ஏதோ தமிழகமே பொங்கி எழுந்திருப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைத்து வருகிறார்கள். இதன் உள்நோக்கம் என்ன என்பதை மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடிக்க வேண்டும்.

- கே.எஸ்.முஹம்மது ஷூஐப், காயல்பட்டினம்.


மனித நேயத்துடன் அணுகவேண்டிய ஈழத்தமிழர் பிரச்சனையை தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் போக்கு எப்போதும் நிலவி வந்துள்ளது என்பதுதான் உண்மை.

இன்றைய இலங்கை தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. ஒருபுறம் இனவெறி பிடித்த சிங்கள ராணுவம்: மற்றொரு புறம் இனவெறி இயக்கமான ஜேவிபி: இன்னொரு பக்கம் எல்டிடிஇ எனும் பயங்கரவாத இயக்கம். இடையில் மாட்டிக்கொண்ட இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் ஈழத் தமிழர்கள்.

ஒரு காலத்தில் செல்வா, குட்டிமணி, ஜெகன் போன்ற தியாகிகள் பலர் தாங்கள் அரணாக இருந்து தமிழ் மக்களை காத்தார்கள். ஆனால் இன்று அப்பாவி தமிழ் மக்களை அரணாக நிறுத்திக் கொண்டு ஒரு கோழைத்தனமான போரை விடுதலைப்புலிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒளிவது, பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் இருக்கும் இடத்தில் பதுங்கியிருந்து தாக்குவது, கோவில்கள், அனாதை இல்லங்களில் தஞ்சமடைந்து தாக்குவது போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிருக்கு உலை வைப்பது இவர்கள்தாம்.

இவர்களால் இலங்கை தமிழ் மக்களுக்கு நன்மையை விட தீமைதான் அதிகம். விடுதலைப்புலிகளின் கடந்த கால வரலாறு என்ன? சீறி சபா ரத்தினத்தை கொன்றது, பத்பநாபாவைக் கொன்றது, சாந்தமான அறிவாளி ஐயா அமிர்தலிங்கத்தை கொன்றது. டெலோ மற்றும் டெஸோ போன்ற அமைப்புகளை இல்லாமல் செய்தது எல்லாம் இவர்கள் தானே?ஆகவே இவர்களை அடக்கி வைத்து, இலங்கை தமிழர்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களுக்கு ஆதரவு அளித்து உதவுவதே இந்திய அரசு செய்ய வேண்டிய பணி.

- எ.எஸ்.ஜாஹிதா சித்தீக், அருவங்காடு

No comments: