அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

திருக்குர்ஆனின் பார்வையில் இறை நூல்கள்!

பைபிளை இறைவேதம் என்று கூற வேண்டுமானால் மேலே தவ்றாத் இஞ்சீல் ஆகிறவற்றைக் குறித்த குர்ஆன் கூறும் அளவு கோல் பைபிளுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. பைபிள் முழுக்க முழுக்க மனிதர்களால் தொகுக்கப்பட்டது என்பதற்கு பைபிளே சான்று பகர்கிறது. மேலும் பைபிளில் காணப்படும் முரண்பட்ட கருத்துக்கள் அதனை இறைவேதம் என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது.


மானிட சமூகம் இப்பூவுலகில் வேரூன்றிய ஆரம்ப கட்டத்தில் இன்று காணப்படுவது போல் சித்தாந்த முறையிலான கருத்து வேறுபாடுகள் காணப்படவில்லை. அவர்கள் ஒரே சமுதாயமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் அனைவரும் ஒரு கடவுளையே வணங்கி வந்தனர். பல்வேறு மதங்கள் இருக்கவில்லை. பின்னர் மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தங்களுடைய மத காரியங்களில் அவர்களுக்கு தர்க்கம் ஏற்பட்டது. சத்திய மார்க்கத்திலிருந்து அவர்கள் அடி பிறழ்ந்த போது அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காகவே இறை தூதர்களும் அவர்களுடன் இறைசெய்திகள் அடங்கிய வேத நூல்களும் அருளப்பட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர், பின்னர், (அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டபோது) அல்லாஹ் நபிமார்களை நற்செய்தி அறிவிப்போராகவும், அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்வோராகவும் அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்; எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான். (2:213)

இவ்வாறு அருளப்பட்ட இறைநூல்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பது பற்றிக் குர்ஆன் கூறவில்லை. எனினும் நான்கு வேதங்களின் பெயர்களை அது குறிப்பிடுகிறது. அவை.

1. தவ்றாத். இது இறைதூதர் மூஸா(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது
2. ஸபூர். இது இறைதூதர் தாவூது (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
3. இஞ்சீல் இது இறைதூதர் ஈஸா (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
4. குர்ஆன். இது இறுதித்தூதர் முஹம்மத் (அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

இது தவிர இன்னும் பல நபிமார்களுக்கு வேதங்களும் எழுதப்பட்ட ஆகமங்களும் கொடுக்கப்பட்டதாகவும் குர்ஆன் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

(இறை விசுவாசிகளே!) நீங்கள் கூறுங்கள்: “நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" (2:136)

இன்னும்; அவர்கள் தவ்ராத்தையும், இன்ஜீலையும், இன்னும் தம் இறைவனிடத்திலிருந்து தங்களுக்கு இறக்கப்பட்டதையும், நிலைநாட்டியிருந்தால் அவர்கள் மேலே - (வானத்தில்) இருந்தும், தம் பாதங்களுக்கு அடியில் (பூமியில்) இருந்தும் (இன்பத்தைப்) புசித்திருப்பார்கள்; அவர்களில் சிலர்(தாம்) நேர்வழியுள்ள சமுதாயத்தினராய் இருக்கின்றனர், அவர்களில் பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையேயாகும். (5:66)

நிச்சயமாக, இது முந்திய ஆகமங்களில் இருக்கிறது. இப்ராஹீம் மற்றும் மூசாவினுடைய ஆகமங்களிலும் (இருக்கிறது). (87: 18,19)

இவ்வாறு அருளப்பட்ட வேதங்கள் அனைத்திலும் நம்பிக்கை கொள்வது முஸ்லிம்கள் மீது கடமையாகும். அவ்வாறு நம்பிக்கை கொள்ளாதவர்கள் வெகுதூரமான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் குர்ஆன் கூறுகிறது.


விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார். (4:136)

பழய வேதங்களைப் பற்றிய குர்ஆனின் நிலைபாடு

முந்தைய சமூகங்களுக்கு அருளப்பட்ட இறை நூல்களான தவ்றாத், இஞ்சீல், ஸபூர் ஆகியவை உண்மையானவை என்று திருக்குர்ஆன் சான்று பகர்கிறது. பார்க்க (5: 44, 21: 48, 17:55, 5:46) குர்ஆன் எவ்வாறு அருளப்பட்டதோ அது போன்று இறை வெளிப்பபாட்டின் மூலம் (வஹ்யி) அவை அருளப்பட்டதாக குர்ஆன் கூறுகிறது.

(நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இன்னும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழி காட்டிட (வேதங்களை இறக்கி னான்). இன்னும், அவன் (உண்மையையும், பொய்யையும்) பிரித்துக் காட்டக்கூடிய (புர்கான் என்னும் இவ்வேதத்)தையும் இறக்கினான்.(3: 3,4)

முந்தைய வேதங்களைக் குறித்த குர்ஆனின் நிலைபாடு மேலே ஆதாரங்களுடன் விளக்கப்பட்டிருக்கிறது. சுருங்கக் கூறினால் இறைநூல்கள் என்பது முழுக்க முழுக்க இறை வெளிப்பாடுகளை மட்டும் கொண்டதாகும். அவை வெறும் தீர்க்க தரிசிகளின் வரலாறுகளையோ அல்லது புராணக் கதைகளையோ கொண்டதல்ல. மனிதர்களால் எழுதப்பட்டதும் அல்ல. மாறாக இறைவன் தீர்க்கதரிசிகளின் மூலமாக வெளிப்படுத்திய வெளிப்பாட்டுச் செய்திகள் ஆகும். அவற்றின் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனால் அருளப்பட்டதாகும். இதனால் மனித பலஹீனங்களான முரண்படுகள், தவறுகள் விடுபடுதல் ஆகியவற்றை விட்டும் அவை தூய்மையானதாக இருக்கும்.


பைபிள் பற்றி குர்ஆன் கூறுகிறதா?

முந்தைய இறை நூல்கள் என்று குர்ஆன் குறிப்பிடும் தவ்றாத் இஞ்சீல் ஸபூர் ஆகியவை பைபிளைப் பற்றியே என்று கிறிஸ்தவர்களில் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் தங்களுடைய வாதங்களுக்கு முரண்பட்டு குர்ஆனை அவர்கள் நிராகரிக்கின்றனர். பைபிளை இறைவேதம் என்று கூற வேண்டுமானால் மேலே தவ்றாத் இஞ்சீல் ஆகிறவற்றைக் குறித்த குர்ஆன் கூறும் அளவு கோல் பைபிளுக்கு இருக்கிறதா என்றால் இல்லை. பைபிள் முழுக்க முழுக்க மனிதர்களால் தொகுக்கப்பட்டது என்பதற்கு பைபிளே சான்று பகர்கிறது. மேலும் பைபிளில் காணப்படும் முரண்பட்ட கருத்துக்கள் அதனை இறைவேதம் என்று கூற முடியாத அளவுக்கு உள்ளது. அவற்றை அடுத்து வரும் தொடர்களில் விரிவாகக் காண்போம். இன்ஷா அல்லாஹ்.

No comments: