அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Monday, February 2, 2009

தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format - PDF)


கணினி பயன்பாட்டில் பி.டி.எப். என அழைக்கப்படும் தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு (Portable Document Format-PDF) இன்று பரவலாக அனைவராலும் உபயோகிக்கப்படும் மிக்க பயனுள்ள ஓர் செயலியாகும்.

இது கோப்புகளை தங்களது தாய் மொழியில் பயன்படுத்தும் ஒவ்வொருவரின் கணினியிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய முக்கியமான செயலியாகும்.

இது எவ்விடங்களில் எவ்வாறு உபயோகப்படுகிறது என்பதை இங்கு காண்போம்.

1. சில நேரங்களில் மற்றொரு கணினியை உபயோகிக்க நிர்ப்பந்தம் ஏற்படும் பொழுது தங்களது சொந்த கணினியில் பயன்படுத்திய செயலி அக்கணினியில் இல்லாமல் இருக்கலாம்

2. கோப்பில்/ஆவணத்தில், குறிப்பாகத் தமிழில் உள்ள எழுத்து வகை புதிதாக உபயோகிக்கும் கணினியில் இல்லாமல் இருக்கலாம். இதனால் அக்கோப்பை / ஆவணத்தைப் படிக்கவும் முடியாது; அச்செடுக்கவும் முடியாது.

3. கோப்பு ஒன்றை உருவாக்கி அதனை மின்னஞ்சலில் பரிமாறிக் கொள்ளும் போது, அதனைப் பெற்றவரிடம் அக்கோப்பு உருவாக்கிய செயலி இல்லையெனில் அக்கோப்பைப் படித்து அறிந்து கொள்ள இயலாது.

இது போன்ற சிக்கல்களைத் தீர்க்கத்தான் தளம்சாரா ஆவணமுறைமைக் கோப்பு என்ற (Portable Document Format File) இந்த புதிய பி.டி.எப் செயலி வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வகைக் கோப்புகளை விண்டோஸ், யுனிக்ஸ், லினக்ஸ் போன்ற எந்த ஒரு இயங்குதளத்திலும் தகுந்த பி.டி.எப் படிப்பி மூலம் மூல வடிவத்திலேயே படிக்க இயலுவதாலேயே இவை அப்பெயர் பெற்றன.

பி.டி.எப் செயலியைக் கொண்டு ஒரு பி.டி.எப். கோப்பு உருவாக்கப்படுகையில் ஆவணத்தின் பக்கங்கள் அச்சில் எப்படி தெரியுமோ அதே வடிவில் இக்கோப்பில் தெரியும் படி இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் படங்களும், அட்டவணைகளும், புள்ளியியல் வரைபடங்களும், பட்டியல்களும் இடம் பெறலாம். அவையும் அப்படியே பி.டி.எப். கோப்பில் அச்சுவடிவில் தெரிவது போன்றே தெரியும் .

இத்தகைய சிறப்பு கொண்ட இக்கோப்பை ஒருவர் தனது கணினியில் படித்தறிய அடோபே படிப்பி (Adobe Reader) என்னும் செயலித் தொகுப்பு அல்லது அதனைப் போன்ற தொகுப்பு தேவைப்படும். இத்தகைய தொகுப்பு மூலமாகத்தான் ஒரு பி.டி.எப். கோப்பைப் படிக்க இயலும்.

இந்த செயலித் தொகுப்பினை இலவசமாக இணையத்தில் அடோபே நிறுவனம் தருகிறது. பல்வேறு செயலித் தொகுப்புகளைப் பெற்று நிறுவி வைப்பதற்குப் பதிலாக இந்த இலவச செயலியினை நிறுவிக் கொண்டால் கணினியின் பளு வெகுவாகக் குறைக்கப்பட்டு அதன் செயல்வேகம் அதிகரிக்கவும் உதவுகிறது.

பல நிறுவனங்கள் பி.டி.எப். கோப்புகளை உருவாக்கும் செயலித் தொகுப்புகளை உருவாக்கி அவற்றை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் இணையத்தில் பதித்துள்ளனர். இந்த இலவச பி.டி.எப். கோப்பை உருவாக்கும் செயலித் தொகுப்புகள் பல வகையாக அமைந்துள்ளன.

வ்வாறான ஒரு செயலித் தொகுப்பின் பெயர் PDF ReDirect v2.1.1 என்பதாகும். இதனை தரவிறக்கம் செய்த பின் கணினியில் தெரியும் Install PDFR.exe என்ற கோப்பின் மீது இரு முறை சொடுக்கி, இந்த செயலித் தொகுப்பினை சில நொடிகளில் கணினியில் நிறுவலாம்

Windows95/98/ME/2000/XP/Server2000/Server2003 ஆகிய ஏதேனும் ஓர் இயங்குதளம் உள்ள எந்த ஒரு கணினியிலும் இதனை நிறுவ இயலும்.

தற்போது இந்த செயலியைப் பயன்படுத்தி ஒரு கோப்பை எவ்வாறு பி.டி.எப் கோப்பாக மாற்றலாம் என்பதைக் காண்போம்.

எந்த கோப்பை பி.டி.எப். கோப்பாக மாற்ற வேண்டுமோ அந்த கோப்பை திறந்து (எடுத்துக்காட்டாக வேர்ட், எக்ஸெல், பேஜ்மேக்கர் போன்றவை) அதில் காணப்படும் ஆணைச்சட்டத்தில் (Menu bar) உள்ள File ஐ தேர்ந்தெடுத்து அதன் அச்சு (Print) பிரிவை சொடுக்க வேண்டும் .

தற்போது அச்சு செய்வதற்கான உதவிகளைக் கொண்ட சாளரம் திறக்கும். அதில் மேல் பகுதியில் உள்ள அச்சு என்ற சிறிய பெட்டியில் அக்கணினியில் அமைக்கப்பட்டுள்ள அச்சு இயந்திரத்தின் பெயர் தெரியும்.

அதற்கு பக்கத்தில் உள்ள பொத்தானை (Button) அழுத்தினால் PDF ReDirect எனக் கிடைக்கும். இதில் வலது புறமாக உள்ள PRINT TO FILE என்ற சொற்களுக்கு எதிரே உள்ள கட்டம் தேர்ந்தெடுக்கும் (tick) அடையாளம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் Print பொத்தானை அழுத்தி பி.டி.எப். கோப்பை உருவாக்கக் கட்டளை கொடுக்க வேண்டும். இப்போது பி.டி.எப். ரீடைரக்ட் செயலி பி.டி.எப். கோப்பு உருவாக்கும் பணியில் இறங்கும்.

உருவாக்கப்படும் பி.டி.எப். கோப்பை எந்த கோப்புத் தொகுதியில் (Folder) சேமிக்க வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்கும் வசதி காட்டப்படும். இதன் மூலம் கோப்புத் தொகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பி.டி.எப். கோப்பு சேமிக்கப்பட்டு முன்வரைவைப் (Preview) பார்க்கலாம். உருவாக்கப்படும் பி.டி.எப். கோப்பின் சிறு முன்வரைவுக் காட்சித் தோற்றம் (preview (thumbnail) of the PDF)சாளரத்தின் வலது கீழாகக் காட்டப்படும். இதனைப் பார்க்க அதைச் சொடுக்கிடலாம்.

இப்போது கணினியில் முன்பே நிறுவப்பட்ட அடோபே படிப்பி திறக்கப்பட்டு பி.டி.எப். கோப்பு காட்டப்படும். இதில் திருப்தி பெற்றபின் மீண்டும் பி.டி.எப் ரீடைரக்ட் மெனுவிற்கு வந்து தேவையெனில் உருவாக்கப்பட இருக்கிற பி.டி.எப். கோப்பின் தன்மைகளை மாற்றி பி.டி.எப். கோப்பின் அளவைக் குறைக்கலாம்.

கோப்பில் படங்கள் இருந்தால் சேமிக்கும் அளவு அதிகமாகும். இதனைத் தடுக்க கோப்பின் தரம் (quality) என்ற இடத்தில் lower quality என்று தேர்ந்தெடுத்தால் கோப்பின் அளவு குறைக்கப்படும். படங்கள் 75 dpi என்ற அளவில் அமைக்கப்படும். இதை விடுத்து Good quality எனத் தேர்ந்தெடுத்தால் 150 dpi என்ற அளவில் அமையும். கோப்பின் சேமிப்பு அளவும் அதிகமாகும். இதே போல் படங்களின் வண்ணங்களை எந்த வகை வண்ணம் என்றும் இதில் தேர்ந்தெடுக்க முடியும்.

ஆனால் ஏற்கனவே அமைக்கப்பட்ட பி.டி.எப். கோப்புகளை இந்த தெரிவுகள் (settings) மூலம் மாற்ற இயலாது.

உருவாக்கப்படும் பி.டி.எப். கோப்பை கடவுச்சொல் கொடுத்து பாதுகாக்கும் வசதியும் இதில் உள்ளது. இதற்கு Encrypt PDF File என்ற பிரிவைக் தேர்ந்தெடுத்து தில் கோப்புக்கான கடவுச்சொல்லைக் கொடுக்க வேண்டும். கடவுச்சொல் கொடுத்தால் தான் உருவாக்கப்படும் பி.டி.எப். கோப்பைத் திறக்க முடியும். இது இல்லாமலும் பைலை உருவாக்கலாம். இனி Print என்ற இடத்தில் கிளிக் செய்தால் பி.டி.எப். கோப்பு உருவாக்கப்படும்.

உருவாகி முடிந்த பின்னர் அந்த கோப்பினை சேமிப்பதற்காக தேர்ந்தெடுத்த கோப்புத் தொகுதியில் காணக் கிடைக்கும். அதனை சொடுக்கி அடோபே படிப்பி மூலம் படித்துச் சரியாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம்.

இந்த பிடிஎப் செயலித் தொகுப்பை இந்தத் தளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கட்டுரை: முஹம்மது அலி ஜின்னா

No comments: