அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Wednesday, February 4, 2009

விளம்பர துண்டு பிரசுரமாகும் ரூபாய் நோட்டுகள்

திருநெல்வேலி, பிப். 2: ரூபாய் நோட்டுகளில் விளம்பரங்களை அச்சிட்டு ஆதாயம் தேடிக் கொள்ளும் செயல் தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.

பாமர மக்களின் தவறான உபயோகத்தால் ரூபாய் நோட்டுகள் அழுக்கடைந்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னரே காலாவதியாவது ஒருகாலத்தில் பெரும் பிரச்னையாக இருந்து வந்தது.

இதையடுத்து, ரூபாய் நோட்டுகளில் "பின்' அடிக்கக் கூடாது, எழுதக் கூடாது என கடுமையான சில விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன் பின்னர், அதுபோன்ற செயல்கள் பெருமளவு குறைந்தன.

தற்போது சிறு, பெரு, குறு நகரங்களில் ஏடிஎம் மையங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் கைகளில் புத்தம், புது நோட்டுகள் பளபளப்பதை காணமுடிகிறது.

மேலும் பழைய, கிழிந்த நோட்டுகளை மாற்ற அரசுடைமை வங்கிகள் அவ்வப்போது சிறப்பு முகாம்களை நடத்துவதால் கிழிந்த நோட்டுகளின் புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது.

இந்நிலையில், சில தனியார் நிறுவனங்கள் ரூபாய் நோட்டுகளில் விளம்பரங்களை அச்சிடும் பழக்கத்தை மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த மலிவான விளம்பர யுக்தி தமிழ்நாடு முழுவதும் வியாபித்து பரவி வருகிறது.

அத்தகைய சுயநல நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் முத்திரை மற்றும் விளம்பர வாசகங்களை மக்கள் மத்தியில் அதிகம் புழங்கும் பத்து, ஐம்பது மற்றும் நூறு ரூபாய் நோட்டுகளில் அச்சிட்டு புழக்கத்தில் விடுகின்றன.

இதன் காரணமாக ரூபாய் நோட்டுகள் விரைவில் அழுக்கடைந்து, நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்னரே காலாவதியாகும் நிலை மீண்டும் உருவாகி உள்ளது.

தனியார் நிறுவனங்களில் இந்தச் செயலால் கள்ள ரூபாய் நோட்டுகளை கூட சில நேரங்களில் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுவதாக திருநெல்வேலியைச் சேர்ந்த வியாபாரிகள் புகார் கூறுகின்றனர்.

இதுபோன்ற தவறான பழக்கத்தால் ரூபாய் நோட்டுகளின் ஆயுள்காலம் குறைந்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுவதோடு மட்டுமின்றி, கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரிக்கவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் செயலை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லையெனில், ரூபாய் நோட்டுகள் விளம்பர துண்டு பிரசுரங்களாக மாறிவிடும் என்று பொதுநல அமைப்புகள் எச்சரித்துள்ளன.

No comments: