அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பு தோழர்கள் அனைவரையும் என்னுடைய இணைய தளத்திற்கு வரவேற்கிறேன்.

Friday, February 6, 2009

வந்தேறிக் கழுதை



எங்கிருந்தோ வந்த கழுதையொன்று விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மேய்ந்தது. கஷ்டப்பட்டு நீர்ப்பாய்ச்சி, உரமிட்டு வளர்த்துப் பாதுகாத்த பயிர்களை திடீரென்று வந்த கழுதை அத்துமீறி நுழைந்து பயிர்களை நாசமாக்குகிறதே என விவசாயி கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

கழுதையை விவசாய நிலத்திலிருந்து எப்படியாவது விரட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் வீட்டுக்குச் சென்று ஒரு தடி, வெள்ளைக் காகித அட்டை, ஆணியுடன் வந்தான். அந்த அட்டையில் "கழுதையே வெளியேறு!" என்று எழுதி, கழுதை முன்பு காட்டிக் கொண்டு நின்றான்.காலையிலிருந்து மாலை வரையில் கழுதை திரும்பும் பக்கமெல்லாம் காட்டியும் பயனில்லை.கழுதை அவனையோ அல்லது அவனின் எதிர்ப்பையோ கண்டு கொள்ளவில்லை!

களைப்படைந்து சோர்வுடன் வீட்டுக்குத் தூங்கச் சென்றான்.புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வரவில்லை. அதிகாலை எழுந்து வீட்டிலுள்ளவர்களையும் அக்கம்பக்கத்திலுள்ள சிலரையும் அழைத்துக்கொண்டு பேரணியாகச் சென்று கழுதையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தான். கழுதை எதிர்ப்புப் பேரணிக்கு வந்த ஒவ்வொருவரும் கையில் "கழுதையே வெளியேறு!" என்ற அட்டை வைத்திருந்தனர். கழுதை அங்கிருந்தவர்களையோ அல்லது அவர்களது எதிர்ப்பையோ கண்டுகொள்ளாமல் பயிர்களைத் தின்றது.

கழுதையின் கள்ளமெளனம் விவசாயிகளை எரிச்சலடையச் செய்தது. சிலர் "கழுதையே வெளியேறு" அட்டையுடன் "கழுதையைக் கொல்வோம்" என்றும் கோஷமிட்டார்கள். கழுதை வழக்கம்போல் அவர்களைக் கண்டுகொள்ளாமல் பயிர்களை மேய்ந்து கொண்டிருந்தது.மேலும் வெருப்புற்ற விவசாயிகள் "கழுதையே வெளியேறு" போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர்.

வழக்கம்போல் கழுதை அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது மேய்ந்து கொண்டே இருந்தது.விரக்தியின் உச்சத்திற்குவந்த விவசாயிகள் இறுதியில் கழுதையின் கொடும்பாவியை எரிப்பதென முடிவு செய்தார்கள். கழுதையின் மாதிரியை உருவாக்கி,கழுதை மேய்ந்து கொண்டிருந்த நிலத்தருகே சென்று கழுதைக்கு எதிராக முழங்கி, ஆக்ரோஷமாக கழுதையின் கொடும்பாவியை எரித்து, "கழுதை ஒழிந்தது" வெற்றி! மாபெரும் வெற்றி என்று கோஷமிட்டு வாகையுடன் வீடு திரும்பினார்கள்.

கழுதையின் கொடும்பாவி எரிவதைக் கண்ட கழுதை அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் புண்முறுவலிட்டு வழக்கம்போல் பயிர்களை மேயத் தொடங்கியது. கொடுங்கோல் கழுதை! திமிர்பிடித்த கழுதை விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்வதாக இல்லை!

எனவே, விவசாயிகள் சிலரை கழுதையுடன் சமரசம் பேச அனுப்பினார்கள்.

"கழுதை அவர்களே! விவசாய நிலத்தின் சொந்தக்காரர்கள் நீங்கள் அவர்கள் நிலத்திலிருந்து வெளியேற வேண்டுமென விரும்புகிறார்கள்!" அவர்களைப் பார்த்த கழுதை,கண்டுகொள்ளாது மேய்வதில் மட்டும் கவனம் செலுத்தியது.

"மதிப்பிற்குறிய கழுதை அவர்களே. நிலச்சொந்தக்காரர்கள் மூன்றில் ஒரு பகுதி நிலத்தை உங்களுக்கு விட்டுத்தர முன்வருகிறார்கள். தயவு செய்து நீங்கள் அவர்களின் விளைநிலத்திலிருந்து உடனடியாக வெளியேறணும்! கழுதை கண்டுகொள்ளாமல் மேய்ந்து கொண்டே இருந்தது. அடுத்தவர், "பொறுமையின் சிகரம் மாண்புமிகு கழுதையாரே! பாதி நிலத்தை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அருள்கூர்ந்து அவர்களின் விளைநிலத்திலிருந்து வெளியேறுங்கள்!"



வெற்றி! வெற்றி!! கழுதை ஒருவழியாக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டது. மக்கள் கூட்டத்தை கழுதை ஒருமுறை பார்த்ததுச் சிரித்தது.விவசாயிகள் மகிழ்ச்சியில் கழுதையைப் புகழ்ந்து பாடினார்கள். ஒருவழியாக அங்கு அமைதி திரும்பியது. தனக்கு ஒதுக்கப்பட்ட பாதிப்பகுதியில் கழுதை சுகமாக வாழ்ந்து வந்தது. எல்லாம் ஒருசில நாட்கள் மட்டுமே!

மீண்டும் வழக்கம்போல் கழுதை விவசாய நிலத்தில் புகுந்து விளைச்சலை மேய்ந்தது.விவசாயிகளும் வேறு வழியின்றி கழுதைக்கு எதிரான எதிர்ப்பைக் காட்டினர். போராட்டங்கள் வலுத்த போதும் அவற்றைப் பொருட்படுத்தாது விளைச்சலைக் கொள்ளையிட்டது.

இந்தக் கழுதை வேறுபகுதியிலிருந்து அழைத்துவரப்பட்ட்க் கழுதையாகும்! கழுதையுடன் பலமுறை போராடி அலுத்துபோன விவசாயிகள் மென்மேலும் போராடத் திராணியற்று அப்பகுதியிலிருந்து வெளியேருவது என்று முடிவு எடுத்தனர்..குடும்பம் குடும்பமாக மக்கள் அவ்விடத்திலிருந்து வெளியேறி ஊரின் ஒதுக்குப் புறத்தில் தங்களுத்தேவையான வீடுகளை அமைத்தனர்.

கிட்டத்தட்ட எல்லோருமே அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினர். கழுதையுடன் சமரசம் பேசியவர்களும்கூட அங்கிருக்க மனமின்றி கூட்டம் கூட்டமாக புதுக்குடியிருப்பிற்கு இடம்பெயர்ந்தனர். கொலைகார ஆக்கிரமிப்பு கழுதையை மக்கள் சபித்தனர். அவர்களிலிருந்து பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் சிறுகல்லை எடுத்து கழுதையை நோக்கி வீசினான். கழுதை அவ்விடத்தை விட்டு வேகமாக ஓடியது!

"நம் எல்லோரையும் இச்சிறுவன் அவமதித்ததோடு நம்மைச் சுற்றியுள்ள மக்கள் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்படி செய்துவிட்டான்" என்று சொல்லி அச்சிறுவனுக்கு மரண தண்டனை வழங்கி கொன்று விட்டு, கழுதையை மீண்டும் அழைத்து வந்தனர். தண்டிக்கப்பட்ட சிறுவனைப் புனிதப்போராளி என்று புகழ்ந்தனர்.

இக்கழுதைக்கு தற்போது அமெரிக்காவில் மாற்றத்தை ஏற்படுத்துமளவுக்குச் செல்வாக்கு இருக்கிறதாம்! ஏனென்றால் அமெரிக்காவில் எந்தக்கட்சி அதிபர் ஆண்டாலும் கழுதைதான் செல்லப்பிராணியாம்!

நீதி: கழுதை கெட்டால் குட்டிச்சுவர் கட்டும்.

No comments: